முகேஷ் அம்பானி பதவியை ராஜினாமா செய்தார்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். அந்த பதவியில் புதிய தலைவராக, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த முடிவு நேற்று அதாவது 27-6-22 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக குழுவும் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த முடிவு குறித்து, ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து பங்குச்சந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், முகேஷ் அம்பானியின் மகன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராகவும், பங்க்ஜ் மோகன் பவார் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பதவி ஏற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் அனைத்து திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் போது எல்லாம், ஆகாஷ் அம்பானியே முன்னிலைபடுத்தப்பட்டு வந்த நிலையில், அவர் தான் அடுத்த தலைவர் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்திய முகேஷ் அம்பானி, தற்போது தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தன்னுடைய மகன் ஆகாஷ் தான், இனி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.