எல்லோர் கண்களும் விலைவாசி மீதே..
இந்திய சந்தைகளில் நாடாளுமன்றத் தேர்தல் மிகமுக்கிய பங்கு வகித்த நிலையில், அனைவரின் கவனமும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தின் மீதே இருக்கிறது. இந்த கூட்டம் ஜூன் 7 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கடன்கள் மீதான வட்டி விகிதம்6.5 விழுக்காடாகவே தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில்தான் வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கி முன்னெடுக்கும் என்று கணித்துள்ளனர். ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் இந்திய அளவில் பெரிய கவனத்தை பெற்றுள்ளன. அதில் பணவீக்க விகிதம்தான் மிகமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பணவீக்கம் 4 விழுக்காடு என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும்,இதன் அடிப்படையிலேயே 25 நிதியாண்டின் தொலைநோக்கு திட்டம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வாடிக்கையாளர் பணவீக்க குறியீடான சிபிஐ, 11 மாதங்களில் இல்லாத அளவாக 4.83விழுக்காடாக இருந்தது. இது கடந்த மார்ச் மாதத்தில் 4.85 விழுக்காடாக இருந்தது. அதே நேரம் உணவுப் பொருட்கள் சார்ந்த பணவீக்கம் 8.7விழுக்காடாகவே தொடர்கிறது.
பணப்புழக்க பற்றாக்குறை என்பது 2.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே நேரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் வரும் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஜூன் 5 ஆம் தேதி இந்திய நிதி கொள்கை கூட்டத்தின் முடிவுகள் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடைசியாக கடன்கள் மீதான வட்டி விகிதம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.