GlowRoad Social Commerce Company.. – வளைத்து போட்ட Amazon India..!!
சமூக வர்த்தக நிறுவனமான (Social Commerce Company) GlowRoad –ஐ Amazon India E-Commerce நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
5 ஆண்டுகளாக பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு பெண்களை மையமாக வைத்து செயல்பட்டு வரும் GlowRoad 2017-ல் சோனல் வர்மா, குணால் சின்கா, நிதேஷ் பந்த், சேகர் சாகு, நிலேஷ் பதரியா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் நிறுவனர்கள் சுமார் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இவர்களில் சோனல் வர்மா, குணால் சின்கா ஆகியோர் மற்ற நிறுவனர்களை விட ஒப்பீட்டளவில் அதிக அளவில் பங்குகளை வைத்துள்ளனர்.
சமூக வர்த்தக நிறுவனமான GlowRoad சுமார் 2 ஆயிரம் நகரங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்கோடுகளில் ரீசெல்லர்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய தயாரிப்புகளை விற்க சப்ளையர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்நிறுவனம் மறுவிற்பனையாளர்கள் மூலம் 2 மற்றும் 3-ம் தர நகரங்களில், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் வாயிலாக வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
GlowRoad நிறுவனத்தில், Korea Investments Partners, Vertex Ventures, CDH Investments, RB Investments உள்ளிட்ட நிறுவனங்கள், சுமார் 31 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். Accel நிறுவனம் 19 சதவீத பங்குகளுடன் GlowRoad-ன் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.
இந்நிலையில், Amazon India E-Commerce நிறுவனம் GlowRoad சமூக வர்த்தக நிறுவனத்தில் முதன்முறையாக முதலீடு செய்யவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை Amazon India வெளியிடா விட்டாலும், இதுதொடர்பான ஒப்பந்தத்தில் GlowRoad சுமார் 75 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.