இந்தியாவில் 1,600 கோடியை இறக்கிய அமேசான்.
மின் வணிக நிறுவனங்களில் கடுமையான போட்டி நிலவும் நிலையில் அமேசான் நிறுவனம் தனது இந்திய கிளைக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாயை முதலீடாக இறக்க இசைவு தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அமேசான் முதலீடு செய்வது இது இரண்டாவது முறையாகும். அதுவும் 5 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனம், தனது இந்திய நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் வளர்ச்சிக்காக 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை இறக்கியுள்ள சூழலில் அதற்கு போட்டியாக தற்போது அமேசான் ஆயிரத்து 600 கோடி ரூபாயை இறக்கியுள்ளது. இதே அமேசான் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 830 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடாக இறக்கியிருந்தது. இந்த முதலீடுகள் குறித்து பேசிய அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக கூறினார். அப்படி முதலீடு செய்தால் அமேசான் நிறுவனம் இந்தியாவில் செய்யும் முதலீட்டின் அளவு 26 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும். ஏற்கனவே 12.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமேசான் வெப்சர்வீசஸ் பிரிவில் அந்நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இந்தியாவில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இடையே பலமான போட்டி நிலவி வருகிறது. இந்த இருநிறுவனங்களும் இணைந்து மீஷோ என்ற நிறுவனத்துடன் போட்டியிட்டு வருகின்றது. மீஷோ நிறுவனம் 500 முதல் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை பெற்றுள்ளது. சாஃப்ட்பேங் நிறுவனத்தின் பிரிவான மீஷோவுக்கு போட்டியாக அமேசான் நிறுவனம் பசார் என்ற அம்சத்தையும் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.