அமெரிக்க நிறுவனங்கள் அதிருப்தி..!!!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினிகளுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு பெரிய நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் டெக் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் இந்த முடிவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளன. மேலும் டிஜிட்டல் மற்றும் உலகளாவிய பெரிய உற்பத்தியாளர் ஆக வேண்டும் என்ற இலக்கு பாதிக்கப்படும் என்றும் அந்த பெரிய நிறுவனங்கள தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 8 முன்னணி டிஜிட்டல் உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்க அரசு தலையிட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்திய அரசின் உரிமம் கோரும் நடவடிக்கைகளால் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூடுதல் செலவு பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் ஒரு பக்கத்தில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து வருகிறார் மற்றொரு பக்கம் அவர்களின் வணிகத்துக்கு எதிரான செயல்களை செய்கிறார் என்றும் புகார் எழுந்துள்ளது. செமிகண்டக்டர்கள் உற்பத்தி உள்ளிட்ட புதிய துறைகளை இந்த புதிய தடை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் முதலீடுகள் குறித்தும் பேசியிருந்தார். இதனையும் சுட்டிக்காட்டியுள்ள வர்த்தக அமைப்புகள் இந்திய அரசுக்கு அழுத்தம் தர அமெரிக்காவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். உகந்த சூழல் இருந்தால் மட்டுமே வணிகத்தை எளிதாக செய்ய இயலும் என்றும் அந்த வணிக அமைப்புகள் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.