அமெரிக்காவுல என்னதான் நடக்குது..?
நிதிப் பற்றாகுறையினால் அமெரிக்க அரசு முடங்கியுள்ள நிலையில் வேலை வாய்ப்புகள் மற்றும் இதர புள்ளி விவரங்கள் பற்றிய தரவுகள் வெளியாவதும் தடைபட்டுள்ளன.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, இந்த ஆண்டில் கிடைக்கக்கூடிய பணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதை காட்டுகிறது. இது வேலை தேடும் அமெரிக்கர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதற்கான அறிகுறியாகும்.
ஆகஸ்ட் மாத இறுதியில் கிடைக்கக்கூடிய வேலைகளின் எண்ணிக்கை 72.1 லட்சத்தில் இருந்து சற்று அதிகரித்து 72.3 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதை வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் வருவாய் கணக்கெடுப்பு காட்டுகிறது. மொத்த வேலைவாய்ப்புகளில், காலி பணியிடங்களின் விகிதம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகவே இருப்பதாக தொழிலாளர் புள்ளியியல் துறையின் தரவு சுட்டுகிறது.
நிதி நெருக்கடியினால், அமெரிக்க அரசின் தொழிலாளர் ஆய்வு துறை (BLS) மற்றும் பிற புள்ளிவிவர நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு, மிகக் குறைந்த ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். பொருளாதாரத் தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியிடுவதை இது தாமதப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் ஒத்திவைக்கப்படக்கூடிய முக்கிய அறிக்கைகளில் தொழிலாளர் துறையின் வாராந்திர வேலையின்மை கோரிக்கைகள் மற்றும் செப்டம்பர் வேலைவாய்ப்பு அறிக்கை ஆகியவை அடங்கும்.
