ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் பற்றிய பிரச்சினைகளை தீர்க்கும்வரையில் ஆப்பிள் இன்க்., தனது தயாரிப்பான ஐபோனுக்கு தேவையான புதிய ஆர்டர்களை வழங்காது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார். இதற்காக தணிக்கையாளர்களை அங்கு அனுப்பியுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஃபாக்ஸ்கான் ஆலையில் பணிபுரியும் பெண்கள் சாப்பிட்ட உணவில் ஒவ்வாமை எற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பிரச்சினை வெடித்தது. “ஊழியர்களுக்காகப் பயன்படுத்தப்படும் தங்குமிட வசதிகள் மற்றும் உணவு அறைகள் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதைக் கண்டறிந்தோம். நாங்கள் தொடர்ந்து நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணிப்போம்,” என்று ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம், உயர் தரத்தை பராமரிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அதன் உள்ளூர் நிர்வாக குழு மற்றும் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைப்பதாகக் கூறியது. “எங்கள் ஊழியர்கள் அனுபவித்த பிரச்சினைக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம், தொலைதூர தங்குமிட விடுதிகளில் நாங்கள் வழங்கும் வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று ஃபாக்ஸ்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
“அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் தொடர்ந்து வழங்கப்படும், மேலும் எங்கள் ஊழியர்கள் பணிக்குத் திரும்பும்போது அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என்று அது மேலும் கூறியது. சமீபத்திய நிகழ்வானது ஆப்பிளின் ஐபோன் விற்பனை அல்லது ஏற்றுமதியை கணிசமாக பாதிக்க வாய்ப்பில்லை, ஆனால் போட்டி ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்களுக்கு இது நற்செய்தியை வழங்கலாம், இந்த நிறுவனங்கள் ஐபோன் 13 தயாரிப்பு ஆர்டர்களைப் பெறக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.