ஆப்பிளின் தொடர் வெற்றி முகம்..
உலகிலேயே மிகமிக அதிக மதிப்பு கொண்ட ஒரு பிரபல நிறுவனம் இருக்கும் என்றால் அது நிச்சயம் ஆப்பிள் நிறுவனம்தான். இந்த நிறுவனம் 3 டிரில்லியன் டாலர் என்ற சந்தை மூலதன மதிப்பை எட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குகள் 0.6 விழுக்காடு அதிகரித்து 189.25 அமெரிக்க டாலரானது. இந்த அளவு என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச அளவாகும். கடந்தாண்டு ஜனவரி 3ஆம் தேதிதான் கடைசியாக ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 3 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டி இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவுக்கு நெருங்கி வருவதால் அந்நாட்டு பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு என்பது 2023 ஆம் ஆண்டில் மட்டும் 46 விழுக்காடு உயர்ந்துள்ளது. nvidia நிறுவனத்தின் பங்குகள் 185 விழுக்காடு உயர்ந்துள்ளது. டெஸ்லா மற்றும் மெட்டா ஆகிய பெரிய டெக் நிறுவனங்களின் பங்குகளும் மதிப்பும் இரட்டிப்பாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்குகள் 40 விழுக்காடு உயர்வை கண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அண்மையில் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் விளைவாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் சந்தையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. எதிர்பார்த்த அளவை விட வருவாய் குறைந்தாலும் பெரிய அளவில் நஷ்டம் ஏதும் இல்லை என்ற நிலையே ஆப்பிளில் தொடர்கிறது. கடந்தாண்டு பிப்ரவரிக்கு பிறகு ஆப்பிள் நிறுவன பங்குகள் 29 முறை அதிகரித்துள்ளது என்கிறது புள்ளிவிவரம்.