டாடா மோட்டார்ஸ் பிரிவுக்கு ஒப்புதலா?
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸை இரண்டு தனித்தனி நிறுவனங்களாக பிரித்து பட்டியலிட பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் என்று இரு வகைகளாக பிரிகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த பிரிவு குறித்து டாடா மோட்டார்ஸ் தகவல் தெரிவித்தது. சொகுசு கார்களான ஜாகுவார் லேன்ட் ரோவர் மற்றும் பயணிகள் வாகனங்களும் ஒரே பிரிவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பங்குதாரர்களிடம் இந்த பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பங்குதாரர்கள் தரப்பில் இருந்து இசைவு கிடைத்துவிட்டது. அதாவது மொத்த பங்குதாரர்களும் டாடா மோட்டர்ஸ் பிரிவுக்கு சம்மதம் தெரிவித்ததாகவே எடுத்துக்கொள்ள முடியும். மிகச்சரியாக சொல்ல வேண்டுமெனில் 99.9995% பங்குதாரர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தைகளில் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை வர்த்தக நேரப்படி 4.95% விலை ஏற்றம் கண்டுஒரு பங்கின் விலை 680 ரூபாய் 30 பைசாவாக விற்பனையானது.
