ஊரக இணைய சேவைக்கு நிதி ஒதுக்க ஒப்புதல்..
இந்தியாவில் உள்ள 6 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்களிலும் இணைய சேவையை உறுதிபடுத்த பாரத் நெட் திட்டம் உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.தற்போது வரை 1லட்சத்து 94ஆயிரம் கிராமங்கள் இந்த திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள கிராமங்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இணைய வசதி கிடைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடைக்கோடிகளில் உள்ள கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும் திட்டத்துக்கான சேவைகளை பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடட் என்ற நிறுவனம் செய்ய இருக்கிறது. அறிமுக திட்டத்துக்கு 3,800 தொழில் முனைவோர், 60,000 கிராமங்களில் பணிகளை செய்ய இருக்கின்றனர். ஒரு மாதத்துக்கு சராசரியாக 175ஜிபி வரை தரவுகளை பயன்படுத்த இந்த திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத இணைய சந்தா சேவைக்கு கட்டணமாக 399 ரூபாய் முதல் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 37 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு நாடு முழுவதும் கண்ணாடி இழை கம்பிகள் புதைக்பப்ட்டுள்ளன. 7.7 லட்சம் கிலோமீட்டர் BBNL நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இரண்டரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது