பிளைட் டிக்கெட் விலை குறையப்போகுதா?
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு தகுந்தபடி பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை எப்போது தனியார் வசம் சென்றதோ அப்போதே விலையை எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வைப்பதே விலையாக மாறியுள்ளது. இந்த நிலையில் விமான எரிபொருள் எனப்படும் ATF விலையை OMCகள் எனப்படும் எண்ணெய் சந்தைபடுத்தும் நிறுவனங்கள் குறைத்துள்ளன,பழைய விலையை விட 9 விழுக்காடு விமான எரிபொருள் விலை குறைந்து ஒரு கிலோலிட்டர் 98 ஆயிரத்து 350 ரூபாய்க்கு டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக 1லட்சத்து 7 ஆயிரத்து 750 ரூபாயாக இருந்த விமான எரிபொருள் தற்போது குறைந்திருக்கிறது.இதன் விளைவாக இந்தியாவில் விமானக்கட்டணம் குறைய இருக்கிறது. கடந்த மாதம் விமான எரிபொருள் விலை 4 விழுக்காடு குறைக்கப்பட்டது.விமானத்தில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில்,விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் உள்நாட்டுக்குள் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை 1 விழுக்காடு கடந்த மாதம் குறைந்துள்ளதாக கூறுகிறது புள்ளி விவரம். சராசரியாக ஒரு மாதத்தில் வெளிநாடுகளுக்கு பயணிப்போரின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 700 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.