ஹோட்டல்கள் மோசடி அம்பலமா?
பிரபல உணவு டெலிவரி செயலி மூலம் ஆர்டர் செய்த ஒரு பத்திரிகையாளர் 45 ரூபாய் பன் பட்டர் ஜாமுக்கு எப்படு 115 ரூபாய் விலை போட முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா திருமூர்த்தி என்பவர் சென்னையில் பத்திரிகையாளராக இருக்கிறார். இவர் அண்மையில் ஸ்விக்கியில் பன்பட்டர் ஜாம் ஆர்டர் செய்தார். அதில் உணவகத்தில் சென்று சாப்பிட்டால் அதே உணவகத்தில் வெறும் 45 ரூபாய்க்கு விற்கும் பன்பட்டர் ஜாம், ஸ்விக்கியில் 115 ரூபாயாக காட்டியது. இந்த அதிக விலையை ஏற்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா,விருந்தினருக்காக இதை ஆர்டர் செய்ததாகவும், மற்ற நாட்களில் இதே பன் பட்டர் ஜாமை நேரடியாகவோ அல்லது வீட்டிலேயோ செய்துகொள்ள முடியும் என்று பிரியங்கா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் 24 முதல் 28 விழுக்காடு தொகையை உணவகங்களில் இருந்து கமிஷனாக பெற்று வருகின்றன. டெலிவரி கட்டணத்தை வாடிக்கையாளர்தான் செலுத்துகிறார் என்றபோதும், பல உணவகங்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு பணம் தரவேண்டும் என்பதற்காக உணவகங்கள் இது போன்ற வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்று ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் விலையை தங்கள் தரப்பு நிர்ணயிப்பது இல்லை என்று ஸ்விக்கி விளக்கம் அளித்துள்ளது. தங்கள் சேவையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் ஸ்விக்கி விளக்கியுள்ளது. இதேபோல் கமிஷன் தொகையை உணவகங்கள் தான் தங்களுக்கு அளிக்கும் என்று சொமேட்டோ நிறுவனமும் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.