சிட்டி – இந்தியாவின் சொத்துக்களை கைப்பற்றப் போவது யார்?
சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
சிட்டி இந்தியா வங்கியின் சொத்துக்கள் அனைத்தும் சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அனைத்தும் பணப் பரிவர்த்தனையாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் வரையறைகளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இரண்டு வங்கிகளும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளன என்றும், கோட்டக் வங்கியின் ஏலத் தொகை , ஆக்ஸிஸ் வங்கியின் ஏலத் தொகையை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
சிட்டி வங்கியின் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி ஜேன் ஃபிரேசர், சில்லறை வர்த்தகத்தில் இருந்து வெளியேறவும், அதிக வருமானம் தரும் தொழிலில் இறங்கவும் முடிவு செய்துள்ளார். அதன்படி இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்க முடிவு செய்து ஒப்பந்தம் கோரினார்.
அதில்தான் கோட்டக் மகேந்திரா வங்கியும், ஆக்ஸிஸ் வங்கியும் தீவிர போட்டியில் உள்ளன. இறுதியில் வெல்லப்போவது யார்?