6 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பஜாஜின் புதிய பைக்..
உலகின் முதல் சிஎன்ஜியில் இயங்கும் பைக்கை அண்மையில் பஜாஜ் உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.
ஃபிரீடம் 125 என்று இந்த பைக்குக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக் பிரதானமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இதை உலகம் முழுவதும் விற்கும் நோக்கில் 6 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து மொத்தமாக ஒரு முறை நிரப்பினால் 330 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெகு சில சிஎன்ஜி நிரப்பும் மையங்கள்தான் இருக்கும் நிலையில் இதேபோல், எகிப்து, டான்சானியா, பெரு, கொலம்பியா வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவுக்கும் இந்த பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே 3 சக்கர வாகனங்களில் இது போன்ற எரிபொருள் மாற்றும் வசதியை பஜாஜ் செய்துள்ளது. இந்நிலையில் எகிப்தில் அடுத்தகட்டமாக இந்த பைக் அறிமுகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் சிஎன்ஜி அதிகம் உள்ளதால் முதல்கட்டமாக இந்த மாநிலங்களை குறிவைத்து ஃப்ரீடம் 125 பைக்குகள் விற்கப்படுகின்றன. முதல் 2-3 மாதங்களில் 10 ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த நிதியாண்டின் இறுதியில் இந்த நிறுவனம் 30 முதல் 40 ஆயிரம் யூனிட்டுகளை விற்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பைக் ஏற்றுமதியாளராக திகழும் பஜாஜ், மொத்த உற்பத்தியில் 35-40 விழுக்காடு பைக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறது.