சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையா?..
உலகிலேயே சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. போதிய மழைப்பொழிவு இல்லாமல் , மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் சர்க்கரை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு பெரிய வரி வருவாயும் கிடைத்து வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு போதிய மழை இல்லாததால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரையை ஏற்றுமதி செய்வதை தடை செய்வது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் முக்கிய முடிவு எட்டப்பட இருக்கிறது. உணவுப்பொருட்கள் விலை உயர்வு அரசியல் ரீதியிலும் பெரிய நெருக்கடியை தருவதால் மத்திய அரசுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை ஏற்றுமதி நிறுத்தப்பட்டால், நியூயார்க் மற்றும் லண்டனில் இதனால் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு ஏற்கனவே கோட்டா முறையில் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகிறது. உள்நாட்டு தேவைக்கே அதிக சர்க்கரை வேண்டும் என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள அதே நேரம் பிரேசிலில் கரும்பு விளைச்சல் அதிகமாக இருக்கிறது.இந்தியாவைப்போலவே தாய்லாந்திலும் கடும் வறட்சி நிலவுவதால் அங்கும் சர்க்கரை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.ஆசியாவின் பல பகுதிகளில் எல் நினோ விளைவு காரணமாக குறைவான மழைப்பொழிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.