7 ஆண்டுகளில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை…?
இந்தியாவில் இருந்து வரும் அக்போடர் மாதம் முதல் வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் கரும்பு விவசாயம் செய்யும் பல இடங்களில் போதுமான அளவுக்கு விளைச்சல் இல்லை என்றும் ,போதுமான மழையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தியா இந்த தடை விதிக்கும்பட்சத்தில் உலகளவில் சர்க்கரையின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு சர்க்கரை உற்பத்திக்கும்,எத்தனால் உற்பத்திக்கும் இந்திய கரும்புஉற்பத்தியாளர்களின் பொருட்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது வரும் செப்டம்பர் 30 வரை 61 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய கடந்த 2016ஆம் ஆண்டே கட்டுப்பாடுகளை அப்போதைய அரசு விதித்தது. அதாவது 2016ஆம் ஆண்டு சர்க்கரை ஏற்றுமதி செய்தால் கூடுதலாக 20% வரி வசூலிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் இருந்துதான் அதிக கரும்பு விவசாயம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பதிவாகவில்லை என்கிறது வானிலை புள்ளி விவரங்கள். இதன் காரணமாக சர்க்கரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டிலேயே சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் சமீபத்திய பணவீக்க அளவு என்பது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக 7.44% ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.உணவுப் பொருட்களின் பணவீக்கமும் 11.5%ஆக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விலையாகும். 2023-24காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி மொத்தமாக 3.3% அதாவது 3 கோடியே 17 லட்சம் டன் ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்நாட்டில் அரிசி தேவையை சமாளிக்க பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.மேலும் கடந்த வாரம் வெங்காயத்தின் ஏற்றுமதி வரி 40%ஆக உயர்த்தப்பட்டது.இந்தியாவில் சில மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இதனை மையப்படுத்தி, உணவுப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது.தாய்லாந்து மற்றும் பிரேசிலில் இருந்து சர்க்கரை உற்பத்தியும் சரிந்துள்ளதால், சர்க்கரை விலை உலகளவில் உயரவே அதிக வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.