வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் !
2021-22 பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசு நடத்தும் பல்வேறு வங்கிகளின் ஒன்பது லட்சம் ஊழியர்கள் வியாழன் முதல் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்து விட்டன.
திங்களன்று, எஸ்பிஐ உட்பட அனைத்து பொதுத்துறை கடன் வழங்குநர்களும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் தொழிற்சங்கங்களைக் கேட்டுக் கொண்டனர்.
புதன்கிழமை கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையர் முன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், தொழிற்சங்கங்கள் திட்டமிட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) பொதுச் செயலாளர் சௌமியா தத்தா தெரிவித்தார்.
டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் (UFBU) அழைப்பு விடுத்துள்ளது. UFBU என்பது (AIBOC,) அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உட்பட ஒன்பது தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பாகும்.