வங்கிகள் இப்போதைக்கு வட்டியை ஏற்ற வாய்ப்பில்லையாம்…
பிச்சைக்காரன் படம் வரும்போது 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது போல அண்மையில் பிச்சைக்காரன் 2 படம் வெளியான அன்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விஷயம் என்னவென்றால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்கள் கைகளில் இருந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக வங்கிகளில் பண புழக்கம் அதிகரித்து உள்ளது. சிட்டி யூனியன் போன்ற வங்கிகளில் போதுமான பணம் புழங்குவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கி கடந்த நிதி கொள்கை கூட்டத்திலும் வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களின் விகிதம் உயர்த்தப்படாமல் தற்போதைய நிலையில் தொடர விரும்புவதாக அறிவித்தனர். கொரோனா பெருந்தொற்றும் அந்தளவு பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில் பொருளாதாரம் சற்று நிலை பெற்றுள்ளது. இதன் விளைவாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வரும் 8ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கை கூட்ட முடிவை அறிவிக்க இருக்கிறது. இதிலும் தற்போதைய நிலையே தொடரவே அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே 25ஆம் தேதி 80,614 கோடியாக இருந்த வங்கிகளின் பணப்புழக்கம் தற்போது ஜூன் 5ஆம் தேதி வரை 2.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை சுமார் 14,000 கோடி ரூபாய் பணம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 3,104 கோடி ரூபாய் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.