போலிகளிடம் உஷாராக இருங்க-ரிசர்வ் வங்கி..
உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து உஷாராக இருக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை காணலாம் வாங்க.. உங்களுக்கு தெரியாத, பரிச்சயம் இல்லாத இணையதளங்கள், செயலிகளில் பணத்தை செலுத்தும்போது விழிப்புடன் இருக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது. அண்மையில் டாக் சார்ஜ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு எதிராக ரிசர்வ் வங்கி சாட்டையை சுழற்றி இருந்தது. ஹரியானாவைச் சேர்ந்த இந்நிறுவனம் வாலட் சேவையை தனது இணையதளம் மற்றும் செயலியில் அறிமுகப்படுத்தியது. இதற்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்த அனுமதியையும் அந்நிறுவனம் பெறவில்லை. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனால் குறிப்பிட்ட நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய கேஷ்பேக்கை திரும்பக் கேட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதற்கு விளக்கம் அளித்திருக்கிறது.
அதாவது முறையான அனுமதி இன்றி இயங்கும் டாக் சார்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் பெற்ற தொகையை வாலட்டில் வைக்காமல் திருப்பி அளிக்கும்படி மட்டுமே கூறியதாகவும் விளக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த நிறுவனம் 15 நாட்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அளிக்க ரிசர்வ் வங்கி ஆணையிட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனமோ மேலும் 45 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தது. குறிப்பிட்ட நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை திரும்ப செலுத்த வரும் மே 17 ஆம் தேதி கடைசி நாளாகும்.