பறப்பதில் மிகப்பெரிய மாற்றம்..
இந்திய விமான போக்குவரத்துத்துறையில் மிகப்பெரிய மாற்றம் வரும் 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இதனை விமான நிலைய ஆணையமும் உறுதி செய்திருக்கிறது. அதாவது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பணி பாதியாக குறையும், எளிமையாக சொல்ல வேண்டுமெனில் இரண்டு விமானங்கள் அருகருகே வரும்பட்சத்தில் தற்போது வரை அது 10 நாட்டிகல் மைல் தொலைவாக இருக்கிறது. வரும் 1 ஆம் தேதி முதல் அது 5 நாட்டிகல் மைலாக குறைய இருக்கிறது.
இந்திய வான் பரப்பில் விமானங்கள் பறப்பதை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை இந்திய அரசு களமிறக்கியிருக்கிறது. அதிநவீன ரேடார்கள் கச்சிதமாக பணியாற்றும் திறன் பெற்ற பொருட்களையும் இந்திய அரசு வாங்கி குவித்துள்ளது. இதன் மூலம் விமான போக்குவரத்து கொள்ளளவு 40 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமான நிறுவனங்கள் பல மடங்கு அதிக விமானங்களை சந்தையில் களமிறக்க ஆர்டர்களை குவித்துள்ள நிலையில் இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையமும் அதற்கு ஏற்ப விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்த நிலை தற்போது இல்லை என்றும் இந்த 10 ஆண்டுகளில் விமான சேவைகள் கிட்டத்தட்ட 75% உயர்ந்திருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை, தற்போது உள்ளதைவிட 1500 உயர வாய்ப்பிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். நொய்டா, நவிமும்பையில் உள்ள புதிய விமான நிலையங்கள் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களைப்போல அடுத்த சில ஆண்டுகளில் மாறிவிடும் என்றும் இதனால் விமானப் போக்குவரத்துத்துறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றும் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விமானங்களின் இடம், பறக்கும் உயரம் ஆகியவற்றை அறிவிக்கும் டிரான்ஸ்பாண்டர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. புதிய விதிகள் அமலாகும்பட்சத்தில் விமான நிலையம் அருகே காத்திருக்கும் விமானங்களின் எரிபொருள் செலவு கணிசமாக குறையும் என்று இண்டிகோ நிறுவன அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காத்திருப்பு நேரம் குறைப்பால் எரிபொருள் மிச்சமாவதுடன் கரியமில வாயு வெளியேற்றமும் குறையும் என்று அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். புதிய நடைமுறை அமலாவதால் சென்னைக்கு வரும் விமானங்கள் காத்திருப்பு மற்றும் பயன நேரம் கணிசமாக குறையும் , வழக்கமான நேரத்தை விட 15 நிமிடங்கள் விமான பயணம் குறைய இருக்கிறது.