கார்பரேட் வரலாற்றிலேயே பெரிய இணைப்பு!!!
HDFC மற்றும் HDFC வங்கி ஆகிய நிறுவனங்களை இணைக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இசைவு தெரிவித்துள்ளது. HDFC நிறுவனம் அடிப்படையில் வீட்டுக்கடன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும்.இதேபோல் HDFC வங்கியும் தனக்கென பிரத்யேக வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக செயல்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களை இணைக்க நீண்ட கால போராட்டம் நடந்து வருகிறது. இந்ந சூழலில் இரண்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் முயற்சிக்கு NCLT அமைப்பு பச்சை கொடி காட்டியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைவது இந்திய கார்ப்பரேட் நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய இணைப்பாகும்.இந்த இணைப்புக்காக பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி,இந்திய போட்டி ஆணையம்,தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளிடம் ஒப்புதலை HDFC நிறுவனம் பெற்றிருந்தது. இந்த இரண்டு பெரிய நிறுவனங்களின் இணைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தையில் அவற்றின் பங்கு விலைகள் 1விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு என்பது அடுத்தாண்டு 2 அல்லது 3வது காலாண்டுக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நிறுவனங்களின் இணைப்பு மூலம் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பு கிடைக்கும் என்று HDFC நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கேக்கி மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களும் இணையும்பட்சத்தில் மொத்த சொத்து மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இந்த இணைப்பு நிறைவடைந்தால் HDFCவங்கியில் 100விழுக்காடு பொதுமக்கள் பங்குகளை வாங்கிக்கொள்ள இயலும்.