400க்கும் மேலான சொகுசு கார்களின் உரிமையாளர் இந்தியாவின் ‘பார்பர் பில்லியனர்’ ரமேஷ் பாபு!
“நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறில்லை, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அதுவே உங்கள் தவறு” என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் ஒரு பிரபலமான கூற்று. மேற்கண்ட சொற்களின் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானவர், சிகையலங்கார தொழில் நடத்தும் முடிதிருத்துவரான ரமேஷ் பாபு. இன்று ரமேஷ் பாபு 400 சொகுசு கார்களுக்கு மேல் வைத்திருக்கிறார்!
ரமேஷ் பாபுவின் அப்பா கோபால், ரமேஷுக்கு 7 வயது இருக்கும்போதே இறந்து விட்டார். அவர் தந்தையால் குடும்பத்திற்க்காக எவ்வித சேமிப்பையும் வைத்திருக்க முடியவில்லை. ரமேஷுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு பேர். ரமேஷின் தாயார் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார். வளரும் வயதில் ரமேஷால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு அருந்த முடிந்தது. ரமேஷின் தாயார், தனது கணவரின் முடிதிருத்தும் கடையை ஒரு நாளைக்கு 5 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டார்.
தன் தாயாருக்கு உதவும் வகையில் அவ்வப்போது தன்னால் முடிந்த வேலைகளை செய்வார் ரமேஷ். செய்தித்தாள் விநியோகம், பால் போடுவது என்று தன்னால் எது முடியுமோ அதைச் செய்வார். எப்படியோ கஷ்டப்பட்டு 10 ஆம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின்னர், அவர் அப்பாவின் கடையை தானே ஏற்று நடத்த முடிவுசெய்தார்.
கடைக்கு ‘இன்னர் ஸ்பேஸ்’ என்று பெயரிட்டார். நாளடைவில் அது பிரபலமானது. முடி திருத்துவது மட்டும் இல்லாமல் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார் ரமேஷ். ஒரு மாருதி ஆம்னி வேனை வாங்கினார். ஆரம்பத்தில் அவர் கடையில் பிஸியாக இருந்ததால் வேன் சும்மா தான் இருந்தது. பிறகு அதை வாடகைக்கு விட்டார். நாளைடைவில் இந்த ஐடியாவே ரமேஷ் பெரிதாக வளர உதவியது.
ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுக் கார்களை வாடகைக்கு விட்டார். டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் இந்த சேவை விரிந்து பரவியது. கூடிய சீக்கிரம் மற்ற ஊர்களுக்கும் கொண்டு செல்லும் எண்ணம் ரமேஷுக்கு இருக்கிறது.
அது சரி. ரமேஷிடம் என்ன என்ன கார்கள் இருக்கின்றன என்று தெரியுமா? மெர்ஸிடெஸ், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் என்று கிட்டத்தட்ட அணைத்து வகையான சொகுசு கார்கள் உட்பட 400க்கும் மேல் ஆகிவிட்டது.ஆனாலும் தனது வளர்ச்சிக்கு மூலாதாரமாய் இருந்த சிகையலங்கார தொழிலை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளார் ரமேஷ்.