இந்திய வணிகர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா “இன்போசிஸ்” நாராயணமூர்த்தி?
இ-காமர்ஸ் ஜாம்பவான் அமேசானுக்கும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் “கேட்டமரான்” (Catamaran Ventures) நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டு வணிகம் முடிவுக்கு வருகிறது. “பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ்” (Prione Business Services) என்றழைக்கப்படும் இந்த கூட்டு வணிகமானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. வருகிற மே 19, 2022 அன்று மறு ஒப்பந்தத்துக்கு வரும் நிலையில் இருநாட்டு நிறுவனங்களும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்தக் கூட்டு நிறுவனத்தில் 3,00,000 வியாபாரிகள், தொழில் முனைவோர் ஆன்லைனில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 40 லட்சம் சிறு – குறு வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்கு டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கான சேவையில் இந்த நிறுவனம் ஈடுபட்டிருந்தது., லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தினார்கள்.
“அமேசான் மற்றும் கேட்டமரான் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் இ-காமர்ஸ் துவக்க நிலையில் இருந்த நாட்களில் ஆன்லைன் திறன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில் சிறு வணிகங்களை மாற்றும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூட்டு வணிகத்தில் நுழைந்தன., மேலும் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்களை அணுகுவதற்கு இந்தக் கூட்டு உதவுகிறது” என்று அமேசான் இந்தியாவின் உலகளாவிய மூத்த துணைத் தலைவரும் நாட்டின் தலைவருமான அமித் அகர்வால் கூறுகிறார்.
“இந்தக் கூட்டு வணிகமானது, வெற்றிகரமாக, அதன் நூற்றுக்கணக்கான பணியாளர்களின் இடைவிடாத முயற்சிகள் மூலம் ஆன்லைன் வணிகம் புதிய எல்லைகளை அடைய உதவியது., 4.3 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களை நேர்மறையான வளர்ச்சிப் பாதையில் நகர்த்தியது., பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது., மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்தது ஆகியவற்றால் நாங்கள் பெருமையடைகிறோம். நாங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் ஆதரவளிக்கக்கூடிய ஒரு பங்குதாரர் கிடைத்ததை நாங்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். இந்தியாவில் இ-காமர்சுக்கு வழிகாட்ட உதவிய இந்த நீண்ட மற்றும் பயனுள்ள கூட்டணிக்காக கேட்டமரான் அணிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று அகர்வால் கூறினார்.
2014 ஆம் ஆண்டில் பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ் உருவாக்கப்பட்ட போது, இ-காமர்ஸ் இந்தியாவில் துவக்க நிலையில் இருந்தது. இந்தியாவில் உள்ள சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் தேவைகளுக்கான ஆதரவு, பயிற்சி மற்றும் ஆன்லைனில் இயங்குவதற்கான கருவிகள் பெரிய அளவில் தேவைப்பட்டது. இந்தியாவின் குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இ-காமர்ஸில் செயல்பாடுகளில் வெற்றி பெற்று டிஜிட்டல் துறையின் வாய்ப்புகளில் இருந்து பயனடைய வழிசெய்வது தான் இந்தக் கூட்டு நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டமாக இருந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளில், இந்தக் கூட்டு நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று பெரும் முன்னேற்றம் அடைந்தது, இது கேட்டமரானின் இந்தியாவின் நுண்ணறிவையும், அமேசானின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பயன்படுத்துகிறது. இந்தியா முழுவதும் 30 நகரங்களில் அடியெடுத்து வைத்திருந்த எங்கள் கூட்டு நிறுவனம், நாடு முழுவதும் விற்பனையாளர்கள் ஆன்லைனில் விற்கவும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பரவலாக விநியோகிக்கவும் உதவியது. காரிகர் மற்றும் சாஹேலி போன்ற திட்டங்களின் வளர்ச்சிக்கும் எங்கள் கூட்டு நிறுவனம் உதவியது. இந்திய இ.காமர்ஸ் துறையை மாற்றியமைப்பதில் “பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ்” முக்கிய பங்கு வகித்துள்ளார், மேலும் வளர்ந்து வரும் இந்திய பிராண்டுகளை உலகளாவிய அளவில் முன்னேற்றுவதற்கு நிறுவனம் உதவியிருக்கிறது.
“உலகளாவிய செயல்முறைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த “பிரிஒன்” பெருமளவில் உதவி இருக்கிறது, வேலைவாய்ப்புகளை உருவாக்கியது, தொழில் நுட்பத்தின் உதவியோடு பரந்த அளவிலான உலகத் தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அளப்பரிய பங்காற்றி இருக்கிறது.” என்கிறார் “கேட்டமரான்” நிறுவனத்தின் தலைவர் ரங்கநாத்.
“அமேசான் உடனான எங்கள் கூட்டு வணிகமானது அதன் மறு ஒப்பந்தக் காலத்தின் முடிவை அடையும் போது, பெரிய மற்றும் சிறிய நகரங்களில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இதன் மூலம் வளர்ச்சி பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஆற்றலை அறிமுகப்படுத்திய இந்த வெற்றிகரமான கூட்டணியை நான் எதிரொலிக்க விரும்புகிறேன். இந்தியாவில் இ-காமர்ஸ் துறையை வடிவமைக்கும் வலுவான பாரம்பரியத்தை தடம் பதித்த இந்தக் கூட்டணிக்காக அமேசானுக்கு நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
வணிகப் போட்டிகளில் நிகழும் முறைகேடுகளுக்காக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக இந்திய போட்டியாளர் ஆணையம் (CCI) தொடங்கிய விசாரணையை நிறுத்த மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை மறுத்த வேளையில் இந்த முடிவை அமேசானும், கேட்டமரானும் எட்டியிருக்கின்றன. இருப்பினும், சிசிஐ விசாரணையில் சேர்ந்து கொள்வதற்கு நீதிமன்றம் நான்கு வாரகால அவகாசம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சில வணிகர் சங்கங்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களை உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அச்சுறுத்தல்களாக நினைக்கின்றன, தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு இந்த நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. அமேசான் இந்தியா இணையதளத்தில் மிகப்பெரிய விற்பனையாளர்களில் ஒன்றான “கிளவுட்டெய்ல்” (Cloudtail) ப்ரிஒன்னு க்கு சொந்தமானது என்று அவர்கள் கூறியுள்ளனர். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இரண்டும் இப்போது இந்திய போட்டியாளர் ஆணையத்தின் விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வணிகப் போட்டியில் முறைகேடுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் வகையில் அவர்களின் வணிக மாதிரி இருப்பதால் இந்த நிலை உருவாக்கி இருக்கிறது என்று சட்ட வல்லுநர்கள் மேலும் கூறுகிறார்கள். நீண்ட காலத்திற்கு, உச்சநீதி மன்றத்தின் முடிவு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும் என்கிறார்கள் அவர்கள்.
“அமேசானும், கேட்டமரானும் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, நாராயணமூர்த்தியின் ஒரு மூடி மறைக்கும் முயற்சி” என்று குற்றம் சாட்டுகிறார் அகில இந்திய வணிகர் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், அமேசான் நிறுவனமானது வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) கொள்கையை “கிளவுட்டெய்ல்” மூலமாக மீறுகிறது என்ற உண்மை ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவோ அல்லது ஒப்பந்த காலத்திலோ நாராயணமூர்த்திக்கு உறுதியாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார்.
இந்த முடிவை எடுப்பதற்கு நாராயணமூர்த்தி ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார்? என்ற கேள்வி எழுகிறது என்கிறார் கண்டேல்வால். “இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்து அமேசான் கிளவுட்டெய்லை ஒரு முன்னுரிமை கொண்ட விற்பனையாளராக ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குமாறு நாராயணமூர்த்தி எப்போதாவது கேட்டிருக்கிறாரா?” என்று கண்டேல்வால் மேலும் கேள்வி எழுப்புகிறார்.
அமேசானின் முறைகேடுகளை இந்திய போட்டியாளர் ஆணையம் விசாரிக்கும் போது “கிளவுட்டெய்ல்” பதில் சொல்ல வேண்டிய சில கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அமேசான் இ-காமர்ஸ் இணையதளத்தில் கிளவுட்டெய்லின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தால் அமேசானும், கிளவுட்டெய்லும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
விசாரணையில் இருந்து தப்பிக்க “கிளவுட்டெயில்” மேற்கொள்ளும் ஒரு வியூகமாக இது இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம், அமேசானை விசாரிக்கும் போது இது நிகழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார், இ-காமர்ஸ் வணிகத்தில் மேலாண்மை செலுத்துவதைத் தவிர இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு நிறுவனத்தோடு கூட்டு வைப்பது என்பது, இந்திய வணிகர்களுக்கு பெரிய வலி தரக்கூடியது என்கிறார் கண்டேல்வால்.