இனிப்பு தொடர்பான கசப்பான செய்தி..
இந்தியாவில் இருந்துதான் வழக்கமாக வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி பெரும்பாலும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது போகிற போக்கை பார்த்தால் இந்தியாவுக்கே சர்க்கரை இறக்குமதி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைவு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாததாலும், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பொழிந்ததாலும், சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடும் வறட்சி நிலவியதால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. இதன் பாதிப்பு 2025 செப்டம்பர் வரை நீடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைந்ததால் கரும்பு விவசாயிகள் மாற்றுப்பயிரை தேர்வு செய்து பயிரடத் தொடங்கியதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கே சர்க்கரை தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
உலகளவில் சர்க்கரை ஏற்றுமதியில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. பிரேசிலில் சர்க்கரை ஏற்றுமதி அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியா பிரேசிலிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவில் பெரிய பாதிப்பு உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. உயிரி எரிபொருளாக எத்தனாலை வழக்கமான எரிபொருளுடன் கலக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில் கரும்பு விவசாயம் பாதிக்கப்படுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
உள்நாட்டு சர்க்கரை பயன்பாடும் 5 விழுக்காடு வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கரும்பு வளர்க்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 56%அளவு மட்டுமே மழைப்பொழிந்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக்குறைவான மழைப்பொழிவு இதுவாகும்.
கரும்பை வளர்க்க போதுமான தண்ணீர் இல்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்திருக்கின்றனர். கரும்பு வளர்த்து வந்த இடத்தில் அதற்கு மாற்றாக சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கரும்பு உற்பத்தி என்பது 29 மில்லியன் டன் என்ற அளவில் இந்தாண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்தாண்டு 26.6மில்லியன் டன்னாக சுருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உற்பத்தி குறையும் அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 6.8மில்லியன் டன் வெள்ளை சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்து வந்த நிலையில் , இம்முறை அந்த அளவு எட்டப்படாத சூழல் உள்ளது. மேலும் ஒரு டன் வெள்ளை சர்க்கரை இந்திய மதிப்பில் 39,000 ரூபாயாக இருக்கிறது. எத்தனால் உற்பத்தியையும் இந்த பிரச்னை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவிய கடும் வறட்சியே இந்த பிரச்னைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள விவசாயிகள், இந்தாண்டு மகசூல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். சோளத்தில் வருவாயும் கிடைப்பதால் , மீண்டும் கரும்பை நட விவசாயிகள் விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.