6ஆவது நாளாக ஏற்றம்!!!
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வெளிநாட்டு நிதிகள் மற்றும் உள்நாட்டில் உகந்த சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. பல நிறுவனங்களின் முதல் காலாண்டு அறிக்கையும் நம்பிக்கை அளித்து வருகிறது.தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகள் பெரிய முன்னேற்றத்தை கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 274 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 479 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 389 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. பஜாஜ் பைனான்ஸ் 7 விழுக்காடும், பஜாஜ் ஃபின்சர்வ் 6% அளவுக்கும் ஏற்றம் கண்டன. ஹீரோ மோட்டோ நிறுவன பங்குகள் 5 விழுக்காடு உயர்ந்தன. எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் பெரிதாக சரிந்தன. பங்குச்சந்தைகள் ஒரு பக்கம் உயர்ந்து வருவதைப் போலவே தங்கத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 17 ரூபாய் விலை உயர்ந்து 5 ஆயிரத்து 452 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. இந்த விலையுடன் பொதுவான 3 விழுக்காடு ஜிஸ்டி மற்றும் செய்கூலி ,சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.