பங்காளியின் பங்குச்சந்தையில் ஏற்றம்..
கடன் சிக்கல்,வெளிநாட்டு பணம் கையிருப்பு இல்லை போன்ற பிரச்னைகளால் பாகிஸ்தான் தவித்து வந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் தனது உதவிக்கரத்தை அண்மையில் நீட்டியது. 3 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சர்வதேச நாணய நிதியம் அளிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சாதகமான சூழல் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் ஒரே நாளில் ஏற்றம் கண்டுள்ளன. ஒரே நாளில் மட்டும் 5.9 % வளர்ச்சியை அந்த நாட்டு பங்குச்சந்தைகள் பெற்றன. அந்நாட்டின் முக்கிய பங்குச்சந்தையான KSEயில் ஒரே நாளில் 2,442 புள்ளிகள் உயர்ந்து 43,894 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.2008 ஆம்ஆண்டுக்கு பிறகு இத்தனை பெரிய வளர்ச்சி ஒரே நாளில் அந்த நாடு கண்டதில்லை. மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் அந்த நாட்டு அரசு பெற்றுள்ளது. ஆட்டோமொபைல் துறையின் பங்குகள் ஒரே நாளில் 6 முதல் ஏழரை விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன.பாகிஸ்தான் சுசுக்கி, ஹோண்டா அட்லஸ் கார்களும் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளன. இறக்குமதிக்கான தடை விதிப்பு மற்றும் பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஆகிய காரணிகளால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். முக்கியமான பணப்பிரிச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் கார் உள்ளிட்ட துறைகளில் நிலவி வந்த சிக்கல்கள் தீர்ந்துபோயின. இதனால் பாகிஸ்தானும் கணிசமான முதலீடுகள் குவிந்துள்ளன.