பிராண்ட் வானத்தில் மிளிரும் துருவ நட்சத்திரம் – நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா, தனது கையில் இருந்த ஈட்டியை டோக்கியோவின் வானில் வீசி எறிந்த அந்தக் கணத்தில் காற்றைக் கிழித்தபடி அது தனது இலக்கை நோக்கிப் புறப்பட்டது, எல்லைக் கோட்டுக்கு அருகில் ஒருமுறை நிதானித்து பின்பு நொடிப்பொழுதில் ஈட்டிக்கு எதிர்த்திசையில் தனது கைகளை உயர்த்தியபடி அவர் நடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியின் அந்தக் கணங்களில் தடகளப் போட்டிகளில் இந்த தேசத்தின் நூற்றாண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்தது, அப்போது அவர் வென்றது ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமல்ல, ஆற்றல், நிதானம், விவேகம் மற்றும் ஒரு ஒளி பொருந்திய முகம் கொண்ட இந்தியாவின் புத்தம் புதிய விளையாட்டு சூப்பர் ஸ்டாரின் வருகையை அவர் அறிவித்தார்.
இப்போது அந்த சூப்பர் ஸ்டாரை நோக்கி மெல்லத் திரும்புகிறது உலகம், ஒரே நாளில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு SUV காரை அவருக்குப் பரிசளிக்கப்போவதாக அறிவித்தார், ஆன்லைன் கல்வி மையமான பைஜுஸ் 2 கோடி பணப்பரிசை அறிவித்தது, இண்டிகோ விமான நிறுவனம் ஒரு ஆண்டுக்கு அவருக்கு இலவச விமானப் பயணத்துக்கான சலுகையை அறிவித்தது, ஒரே நாளில் இந்தியாவின் தடகள வீரர்களுக்கான எலைட் கிளப்பில் அவர் இணைந்து கொண்டார், அவர்கள் நீரஜின் தங்கக் கைகளை தங்கள் வணிகத்துடன் இணைத்துக்கொண்டார்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கடவுளராக வளம் வந்த அந்த வெளிச்ச வெள்ளத்தில் இனி நீரஜ் மிதக்கப் போகிறார்.
நீரஜ் சோப்ரா இப்போது பிரிட்டிஷ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் “அம்ஸ்ட்ராடின்” பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார். ஆனால், டோக்கியோக்குப் பிறகு, அவரது பிராண்ட் மதிப்பு கூரையை உடைத்துக்கொண்டு வளர்ந்து விடும் என்று இமேஜ் குரு திலீப் செரியன் கூறுகிறார். “தடகளப் பிரிவில் தங்கம் வென்றவர்கள் அரிதானவர்கள். எனவே இந்த பிராண்டிங் சந்தைக்கு கிடைக்கும் வீரர்களின் தேர்வு மிகக் குறைந்தது,” என்று அவர் மேலும் கூறுகிறார். சோப்ராவின் விஷயத்தில், அவர் இந்திய இராணுவத்தில் (ஒரு ஜூனியர் நியமிக்கப்பட்ட அதிகாரியாக) சுபேதாராகப் பணியாற்றுகிறார் என்ற உண்மை, அவர் ஒரு விதிவிலக்காக இருப்பதுடன், இப்போது நிலவும் அற்புதமான தேசியவாத சூழலில் அவர் மிகப்பெரிய உயரங்களுக்கு வளர்வார்.
“இந்திய பிராண்ட் சந்தையில், இராணுவப் பின்னணி, ஒலிம்பிக் பின்னணி, கார்ப்பரேட் புரிதல் ஆகியவற்றின் கலவையைக் கொண்ட வீரர்களின் எண்ணிக்கை மிகவும் அரிதானது” என்கிறார் செரியன். சோப்ராவின் பிராண்ட் மதிப்பு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை விட நான்கு மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று அவர் கணக்கிடுகிறார், அபினவ் பிந்த்ரா, தனது 2008 வெற்றிக்குப் பிறகு சுமார் ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நீரஜ் சோப்ராவின் தனிப்பட்ட திறன், அவர் சார்ந்திருக்கும் தடகள விளையாட்டின் ஈர்ப்பு மற்றும் விளம்பரங்களுக்கு ஏதுவான அவரது கம்பீரத் தோற்றம் போன்றவை அவருக்குக் கூடுதல் மதிப்பைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் இமேஜ் ஆலோசகர்கள். இன்னும் சிலர், அவர் கிரிக்கெட் வீரர்களை மிஞ்சும் அளவுக்குப் புகழ் பெறுவார் என்கிறார்கள், அவருடைய எளிமையான பானிபட் விவசாயக் குடும்பப் பின்னணியும் கூட அவருக்கு சாதகமாக இருக்கும், பல நிறுவனங்கள் அவருடன் பணிபுரியத் தயாராகி விட்டார்கள், ஆனால், அவர் தேர்வு செய்யப்பட்ட சிறந்த விளம்பரங்களை மட்டுமே ஒப்புக் கொள்வார் என்று தோன்றுகிறது என்று அவர்கள் கணிக்கிறார்கள். “2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் ராணுவப் பின்னணியில் இருந்து விளம்பரங்களில் நடித்த முதல் விளையாட்டு வீரர். ஆனால், நீரஜ் சோப்ராவின் விளையாட்டானது அவரது பதக்கத்தின் மின்னும் வண்ணத்தை மேலும் ஒளிர வைக்கும்” – என்கிறார் அல்கெமிஸ்ட் ப்ராண்ட் ஆலோசனை நிறுவனத்தின் நிறைவாக் இயக்குனர் சமித் சின்ஹா. இது ஒரு வெறும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மட்டுமல்ல, இந்தப் பிரிவில் சுதந்திர இந்தியா பெற்றிருக்கும் முதலாவதும் கூட, மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதலில் நாம் பதக்கங்களை வென்றிருக்கிறோம், ஆனால், நீரஜின் ஈட்டியைப் போல மக்களின் மனதில் அவை கவர்ச்சிகரமாக இல்லை.
கவர்ச்சிகரமான பிராண்ட் வரிசையில் இந்தியாவில் எப்போதும் கிரிக்கெட் முன்னணியில் இருக்கிறது, நீண்ட இடைவெளியில் டென்னிஸ் மற்றும் பேட்மின்டன் விளையாட்டுக்கள் இருக்கிறது, அதிலும் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து இருவரின் வருகைக்குப் பின்னர்தான் பேட்மின்டன் வளர்ச்சி அடைந்தது, தடகள வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அவர்களின் பிராண்ட் மதிப்பு அவ்வளவு விரைவில் உயர்ந்து விடாது. இரண்டு தனிநபர் விளையாட்டுக்கான ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணியும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியருமான பி.வி.சிந்துவின் அளவுக்கு நீரஜ் உயர்ந்து விடுவார் என்கிறார் சின்ஹா.
பி.வி.சிந்துவின் பிராண்ட் மதிப்பு 2020 இல் 12 மில்லியன் டாலர் என்று டஃப் & பெல்ப்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது, இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக பிரபலங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்து வெளியிடுகிறது.
நீரஜ் சோப்ராவுடன் சமீபத்தில் இணைந்த நிறுவனங்கள் கண்ட்ரி டிலைட் நேச்சுரல்ஸ், கில்லட் இந்தியா, மொபைல் இந்தியா மற்றும் IQOO. சமூங்க இணையதளங்களில் நீரஜைப் பின்தொடர்பவர்கள் பெருமளவில் அதிகரித்திருக்கிறார்கள், அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 15 மடங்கு அதிகரித்து இன்ஸ்டாகிரேமில் 2.6 மில்லியனாக உயர்வடைந்திருக்கிறது என்கிறார் டஃப் & பெல்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவிரால் ஜெயின். எப்படி இருந்தாலும் கிரிக்கெட் தான் பிராண்ட் மதிப்புகள் படி கணக்கிட்டால் முதல் 20 இடத்தில் இருக்கிறார்கள், ஆனால், இந்தச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. கடந்த சில வருடங்களில் கபடி, கால்பந்து மற்றும் பேட்மின்டன் விளையாட்டுக்களுக்கு தொழில் முறையிலான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது, இந்த லீக் ஆட்டங்களுக்கு நல்ல விளம்பரங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 90 சதவிகித ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களைப் பின்தொடர்ந்தாலும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு மேலும் பல வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள், குறிப்பாக எதிர்காலத்தில் நீரஜ் சோப்ரா குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுவார் என்பது மறுக்க முடியாத உண்மை.