எதிர்பார்ப்புகள் புஸ்க்…
ஜூலை 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, இந்தியப்பங்குச்சந்தைகள் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்73 புள்ளிகள் சரிந்து 80ஆயிரத்து 429 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30புள்ளிகள் வீழ்ந்து 24ஆயிரத்து 479 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது பங்குச்சந்தையில் முதல் பாதி பெரிய மாற்றமின்றி காணப்பட்டது. நீண்டகால மூலதன ஆதாய வரி 10 முதல் 12.5விழுக்காடாக உயர்த்தப்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பலரும் தங்கள் பங்குகளை விற்பதில் கவனம் செலுத்தினர். இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் இரண்டாவது பாதியில் சரிவு காணப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் பங்குகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கியதால், பங்குகள் பெரிய வீழ்ச்சி காணாமல் லேசான சரிவுடன் பங்குச்சந்தைகள் வணிகத்தை முடித்தன. Titan Company, Tata Consumer, ITC, NTPC,Adani Ports உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. L&T, ONGC, Hindalco, Shriram Finance ,Bajaj Finance, ஆகிய நிறுவனங்கள் சரிவை கண்டன். FMCG, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.5 முதல் 2.5விழுக்காடு வரை லாபம் கண்டன. அதேநேரம் வங்கித்துறை, உலோகம், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரிய சரிவாக 1 முதல் 2 விழுக்காடு சரிவை கண்டன. சென்னையில் ஜூலை 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, , 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்து விற்பனையானது. 52ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6550 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 3 ரூபாய் 10 காசுகள் குறைந்து 92 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ 92ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்