சீனாவிடம் வாங்கி மேக் இன் இந்தியா!!!
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் உண்மையில் நல்ல திட்டம்தான், எந்த ஒரு நாட்டையும் சார்ந்து இல்லாமல் எல்லாமே இந்தியாவிலேயே கிடைக்கும் என்ற நிலை எட்டும்போது இந்திய பொருளாதாரமும் வானம் அளவுக்கு உயரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்தியா முன்பு இருக்கும் சில சவால்கள் என்ன என்பதை இப்போது காணலாம். இந்தியாவில் சோலார் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உண்மையில் இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 280 ஜிகாவாட் சோலார்மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை 60 ஜிகாவாட் மட்டுமே நம்மால் உற்பத்தி செய்ய முடிகிறது. இந்த நிலையில் இந்தியாவில் சோலார் உற்பத்தியை நாம் மட்டுமே செய்துவிட முடியாது என்றும் வேறு வழியே இல்லாமல் சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதற்காக அதிகபட்சம் அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றால் தற்போதுள்ள இறக்குமதி வரி 40%-ல் இருந்து 20 விழுக்காடாக வேண்டுமானால் குறைக்க முடியும். இதேபோல் நாங்கள் இந்தியாவிலேயே ஐபோன்களை தயாரிக்கிறோம் என்று மார்தட்டிக்கொண்டாலும் உண்மையில், செல்போன்களில் பயன்படுத்தப்படும், கம், ஸ்குரூ, பிராக்கெட்ஸ் போன்றவை சீனாவிடம் இருந்துதான் இந்தியா வாங்க வேண்டியுள்ளது. உண்மையில், சீனாவில் இருந்து கம்பியூட்டர்கள்,லேப்டாப்களின் இறக்குமதி வெகுவாக குறைந்து வருவது நல்ல விஷயம்தான் என்றாலும், மின்சார பைக்குகளில் பயன்படுத்தும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு இந்தியா சீனாவைத்தான் 96 விழுக்காடு நம்பியிருக்க வேண்டியுள்ளது. உண்மையில் இது மேக் இன் இந்தியா என்றாலும் சீனாவின் உதவி இல்லாமல் இந்தியாவால் ஒரே பாட்டில் எல்லாம் கலெக்டராகிவிட முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில் நிஜத்தில் சீனாவின் ஒத்துழைப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை