“கெய்ர்ன் எனர்ஜி” முதலீட்டாளர்களுக்கு அடிக்கப்போகும் “ஜாக்பாட்” !
கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி, தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு $ 700 மில்லியன் வரை சிறப்பு ஈவுத்தொகையாக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவுடனான நீண்டகால வரி வழக்கு ஒரு முடிவை எட்டியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை எரிபொருள் உற்பத்தி நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி வெளியிட்டிருக்கிறது. இந்த சிறப்பு ஈவுத்தொகையானது நேரடியாக விநியோகிக்கப்படும், அதே வேளையில் பங்குதாரர்களை நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்கவும் அனுமதிக்கிறது.
இந்திய அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி கெய்ர்ன் எனர்ஜி பன்னாட்டுத் தீர்ப்பாயங்களை அணுகியது, டிசம்பர் 22, 2020 அன்று பன்னாட்டு நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்னுக்கு ஆதரவாக தீர்ப்பை அறிவித்ததும், தீர்ப்பில் நிறுவனத்திற்கு ₹ 8,000 கோடி இழப்பீட்டை செலுத்துமாறு இந்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசிடம் இருந்து மொத்த பணம் சுமார் $1.06 பில்லியன் பெறப்படும் என்று கெய்ர்ன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கிய பிறகு, மீதமுள்ள வருமானத்தை அதன் சொத்துக்களை அதிகரிக்க செலவிடத் திட்டமிட்டுள்ளது கெய்ர்ன். பங்குச் சந்தைகளில், நிறுவனத்தின் பங்குகள் 8.2% வரை உயர்ந்தன, இது கடந்த ஒரு மாதத்தில் மிகப்பெரிய ஒருநாள் உயர்வாகும்.
கெய்ர்ன் எனர்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி “சைமன் தாம்சன்” லண்டனில் இது குறித்துக் கூறுகையில், “இந்தியாவிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்ற பின்னர் இரண்டு நாட்களுக்குள் பாரிஸ் நகரில் இருக்கும் இந்திய ராஜதந்திரக் குடியிருப்புகள் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானங்களைக் கைப்பற்றுவதற்கான வழக்குகளை கெய்ர்ன் கைவிடும், கெய்ர்னின் பங்குதாரர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு முன்னேறுவதில் உடன்படுகிறார்கள், எங்கள் முக்கிய பங்குதாரர்களான பிளாக்ராக் மற்றும் பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.
பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பாதிப்படைந்த இந்தியாவின் நற்பெயரை மீட்பதற்காக, கடந்த மாதம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடனான ₹1.1 லட்சம் கோடி மதிப்பிலான வழக்குகளை முடிவுக்கு வர ஒரு சிறப்பு சட்டத்தை இந்திய அரசு இயற்றியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.