Trumpக்கு எதிராக வழக்கு..!!
புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை டிரம்ப் அரசு $100,000 ஆக உயர்த்தியுள்ளதை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை வழக்குத் தொடர்ந்துள்ளது. H-1B திட்டத்திற்கான தற்போதைய சட்டங்களில் உள்ள விதிகளை இது மீறுவதாக மனுவில் கூறுயுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் , வெளிநாடுகளில் இருந்து குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வரவழைத்து, அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்துவதை தடுக்க, இந்த விசா கட்டண உயர்வை டிரம்ப் முன்னெடுத்துள்ளார்.
இந்த கட்டண உயர்வு, H-1B திட்டத்தை நிர்வகிக்கும் குடிவரவு மற்றும் தேசிய சட்ட விதிகளை மீறுவதால், இது சட்டவிரோதமானது என்று அமெரிக்க வர்த்தக சபை தனது மனுவில் கூறியுள்ளது.
விசா வழங்க அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுகளின் அடிப்படையில் தான் விசா கட்டணங்கள் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுவதாக, அக்டோபர் 16 அன்று அமெரிக்க வர்த்தக சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொலம்பியா மாகாணத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
H-1B திட்டம் உள்ளூர் திறமையாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் உயர் திறமையான வேலைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய $100,000 விசா கட்டணத்தினால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், H-1B திட்டத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்று அமெரிக்க வர்த்தக சபையின் நிர்வாக துணைத் தலைவரும், தலைமை கொள்கை அதிகாரியுமான நீல் பிராட்லி கூறினார்.
FWD.us போன்ற அமைப்புகள், ஜனவரி 2025 நிலவரப்படி அமெரிக்காவில் 7.3 லட்சம் H-1B விசா வைத்திருப்பவர்கள் உள்ளதாக கூறுகின்றன. இவர்களில், சுமார் 70% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜூன் 2025 இல் 5,505 H-1B விசாக்களை பெற்றுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது.
இது இந்த ஆண்டில், உலகளவில் இரண்டாவது அதிகபட்ச அளவாகும். 10,044 H-1B ஊழியர்களுடன் அமேசான் முதலிடத்தில் உள்ளது.
இன்போசிஸ் 2,004 H-1B விசாகளையும், விப்ரோ 1,523 H-1B விசாக்களையும், டெக் மஹிந்திரா அமெரிக்காஸ் 951 H-1B விசாகளையும் பெற்றுள்ளன
