ஐஐடி மும்பையை புகழ்ந்த பிரபலம்..
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக நந்தன் நீலகேனி இருக்கிறார். இவர் மும்பை ஐஐடிக்கு கடந்த புதன்கிழமை சென்றார். அப்போது பேசிய நந்தன், தனது அனைத்து சாதனைகளும் ஐஐடி மும்பையால்தான் சாத்தியமானதாக கூறியுள்ளார்.
ஐஐடி மும்பையுடன் தனக்கு இருக்கும் 50 ஆண்டுகள் பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 315 கோடி ரூபாயை நந்தன் நன்கொடையாக அளித்தார். உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மாறும் மும்பை ஐஐடிக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய நந்தன் , தனது விஜயத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களின் புகைப்படத்தையும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நந்தனை பெருமைப்படுத்த விரும்பிய மும்பை ஐஐடி, தனது பிரதான கட்டட்ததுக்கு நந்தன் நீலகேனி வளாகம் என்று பெயர் சூட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுவரை மும்பை ஐஐடி நிறுவனத்துக்கு என 400 கோடி ரூபாய் அளவுக்கு நந்தன் நீலகேனி நன்கொடை அளித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் வரலாற்றில் தனிப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட அதிகபட்ச நன்கொடையாகும். 1973ஆம் ஆண்டில் மும்பை ஐஐடியில் நந்தன் நீலகேனி எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தார்.