இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி !
விமான சேவை நிறுவனங்கள் பொதுவாகவே அந்நாட்டின் மதிப்பை எதிரொலிப்பவை, ஆனால், இந்த மதிப்பை பொருட்படுத்தாது சில நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதும் நிகழத்தான் செய்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் பொதுமக்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. தெருவோரப் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட “பிளாஸ்டிக்” பயன்பாடு இருக்கும் பட்சத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதிப்பதையும், கடைக்கு சீல் வைப்பதையும் பார்த்திருக்கிறோம்.
விமான சேவை நிறுவனங்களில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமான “இண்டிகோ ஏர்லைன்ஸ்” தனது பயணிகளுக்கு கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் தடுப்புக்கான மூன்றடுக்கு மாஸ்க், முகக்கவசம் மற்றும் சேனிட்டைசர் போன்ற பொருட்களை ஒரு பிளாஸ்டிக் பையில் கொடுத்து வந்தது. இது 27 மைக்ரான் அடர்த்தி கொண்டதாக கண்டறியப்பட்டு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிசோதனைக்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது, இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ₹ 25,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை (19-08-2021) தேதியிட்ட நோட்டீஸ் அனுப்பியது மட்டுமின்றி எளிதாக இயற்கையான முறையில் மட்கும் தன்மையுடைய பைகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியிருக்கிறது.
பொதுவாக பெரிய நிறுவனங்களின் விதிமீறல்களைக் கண்டும் காணாமல் இருக்கும் சென்னை மாநகராட்சி, இந்த விஷயத்தில் உடனடியாகக் களத்தில் இறங்கி இண்டிகோவுக்கு அபராதம் விதித்திருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். பாரபட்சமின்றி இந்த நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் மணீஷ் நார்னவேர் – IAS க்கு, இண்டிகோ நிறுவனம் அளித்திருக்கும் “ட்விட்டர்” பதிலில் “உங்கள் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறோம், இனி வரும் காலங்களில் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவோம்” என்று தெரிவித்திருக்கிறது. தவறை சுட்டிக்காட்டியதும், அதனை உணர்ந்து சரிசெய்து திரும்பவும் நிகழாமல் இயற்கையை பாதுகாக்க இயன்றதை செய்வதும் வரவேற்கத்தக்கதே.