சீனா 6 மடங்கு முன்னே உள்ளது: நாராயண மூர்த்தி…
வல்லரசு நாடாக மாறத்துடிக்கும் இந்தியாவை விட சீனா 6 மடங்கு முன்னே இருப்பதாக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். ELCIA என்ற தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவரின் பேச்சு பலருக்கும் அசவுகர்யத்தை ஏற்படுத்தியது. உலகின் உற்பத்தி கேந்திரமாக மாற சீனா பல்வேறு முயற்சிகளை செய்வதாகவும், இந்தியாவை விட 6 மடங்கு அதிக ஜிடிபியை சீனா கொண்டுள்ளதாகவும், இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை விட சீனாவின் பொருளாதாரம் மிகவும் அதிகம் என்றும், அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனாவின் ஜிடிபி உள்ளதாகவும் அந்நாட்டு ஜிடிபி மதிப்பு 17 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாகவும், இந்தியாவின் ஜிடிபி வெறும் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் பொது நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக கூறியுள்ள அவர், அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவை விடவும் மனித ஆற்றல்தான் முதன்மையானது என்று கூறியுள்ள அவர், சந்தை நிலவரங்களை தொழில் முனைவோர் கவனிக்க வேண்டும் என்றும், நாாரயணமூர்த்தி பேசியுள்ளார். நாராயண மூர்த்தியின் இந்த பேச்சு இந்தியர்கள் இன்னும் எத்தனை வேகத்தில் ஓடவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.