சீனாவின் “நிங்போ” துறைமுகம் மூடல் ! இந்திய எலெக்ட்ரானிக்ஸ் சந்தையில் மற்றொரு விலையேற்றமா?
சீனாவின் நிங்போ துறைமுகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருப்பது ஒருபக்கம் இந்திய எலெக்ட்ரானிக் சந்தையை பாதிக்கும் சூழலில், இன்னொரு பக்கம் சில காலமாக சந்தித்து வரும் “கண்டெய்னர்” பற்றாக்குறை சிக்கல்களுக்கு குறுகிய காலத் தீர்வாகவும் அமைந்திருக்கிறது. “நிங்போ” துறைமுகம் மூடப்பட்டதால், காலியான கண்டெய்னர் கப்பல்களில் சில இந்தியாவை நோக்கித் திருப்பி விடப்பட்டிருப்பது சில காலமாக இந்தியாவில் நிலவி வந்த கண்டெய்னர் பற்றாக்குறையை குறுகிய கால அளவில் மேம்படுத்தியுள்ளது. இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு நீடிக்கும் என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பற்றாக்குறையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் தீர்க்கப்படும் என்று நாங்கள் (தொழில்துறை) எதிர்பார்க்கிறோம்” என்று என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் ப்ரொமோஷன் கெளன்சில் (EEPC) இந்திய துணைத் தலைவர் அருண் கரோடியா கூறி இருக்கிறார்.
2020 நவம்பர் முதல் இந்தியா கடுமையான கண்டெய்னர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இதனால் கடல் சார் போக்குவரத்துக்கான சரக்கு கட்டணங்கள் 9 மாதங்களில் 5-7 மடங்கு உயர்ந்துள்ளன. “காலி கன்டெய்னர்கள் கிடைப்பது ஓரளவு மேம்பட்டு வந்தாலும், தொழில்துறைக்கு, உயர்ந்து வரும் கடல் சரக்குக் கட்டணங்களுக்கான தீர்வு இதுவரை இல்லை” என்று கரோடியா மேலும் கூறினார். சீனத் துறைமுகமான நிங்போவில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஒரு தொழிலாளி கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப் பட்டதற்குப் பிறகு, துறைமுகத்தின் மெய்ஷன் கண்டெய்னர் முனையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “துறைமுகம் ஆகஸ்ட் 25 அன்று மீண்டும் திறக்கப்பட்டாலும், இந்தத் துறைமுக மூடல் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது” என்று தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, எலக்ட்ரானிக் சிப் , ஏசி, குளிர்சாதனப் பெட்டிகளுக்கான கம்ப்ரெசர்கள் மற்றும் தொலைக்காட்சி பேனல்கள் (எல்இடி & எல்சிடி) போன்ற முக்கியமான உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன, இது உள்நாட்டுத் தேவையில் 70 சதவீதமாக உள்ளது. தொழில்துறையினரின் கருத்துப்படி, இந்தியாவில் இந்த உதிரி பாகங்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. சீனாவிலிருந்து கிட்டத்தட்ட எந்த கண்ட்டெயினரும் இப்போது வராத நிலையில், பல முன்னணி பிராண்டுகள் தங்கள் பண்டிகை கால விற்பனைத் திட்டங்களைக் குறைக்க இது வழிவகுத்திருக்கிறது. வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், பண்டிகைக் காலத்தில் ஏற்படும் அதிக தேவைக்கு இருப்பு செய்யப்படுவது வழக்கம்.
“சிப்-செட் மற்றும் பேனல்கள் போன்ற உதிரிபாகங்களின் பற்றாக்குறை இந்திய சந்தைகளில் தாக்கம் விளைவித்திருக்கிறது. இந்த பிரச்சினை இப்போதைக்குத் தீர்க்கப்பட வாய்ப்பில்லை, பண்டிகைக் காலங்களில் அதிகமாகும் தொலைக்காட்சித் தேவைகளில் இது பற்றாக்குறையை உருவாக்கும். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகள் பண்டிகை மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு சந்தையில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் பற்றாக்குறையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அவ்னீத் சிங் மார்வா கூறுகிறார்.
பற்றாக்குறை தவிர, சந்தையில் பல பொருட்களின் விலைகள் பண்டிகைக் காலத்துக்கு சற்று முன்னதாக உயரும். ப்ளூ ஸ்டார் நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் “ஏர் கண்டிஷனர் தயாரிப்பாளர்கள் மற்றொரு விலை உயர்வை (7% முதல் 11% வரை) நோக்கி நகர்வத்தைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார். ஏ.சி.க்கள், பிரிட்ஜுகள், டிவிக்கள், எல்இடி & எல்சிடி கணினி திரைகள், நோட்புக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 2020 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கி ஏற்கனவே இரண்டு முறை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது