தீபாவளி விற்பனைக்குக் கார்களில்லை! கலக்கத்தில் கார் நிறுவனங்கள்!
பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய கார் கம்பெனிகள் ஒருபுறமென்றால், அடுத்து “சிப்” வடிவில் சிக்கல் எழுந்திருக்கிறது. விழாக்கால விற்பனை நெருங்கும் சூழலில் கார்களின் விற்பனை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, உலகளாவிய சிப் மற்றும் செமி கண்டக்டர்களின் பற்றாக்குறையானது, விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கி இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செப்டம்பர் மாத விற்பனையில் மிகப்பெரிய சரிவை அடைந்திருக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, செப்டம்பர் மாதம் விற்பனையான 86,380 யூனிட்கள் விற்பனையில் 46.16 % சரிவை சந்தித்திருப்பதாக நேற்று (01-10-2021) அறிவித்தது. ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,60,442 யூனிட்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், செப்டம்பர் மாத மொத்த விற்பனையில் 45,791 யூனிட்களை விற்று 23.6 % சரிவை அறிவித்தது. ஹூண்டாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 59,913 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஆனால், டாடா மோட்டார்ஸின் உள்நாட்டு விற்பனை மட்டும் 2020 செப்டம்பரில் விற்ற 44,410 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 55,988 யூனிட்கள் விற்பனை செய்து 26 % வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் டாடா மோட்டார்ஸின் விற்பனை 23,211 யூனிட்கள், இப்போது செப்டம்பரில் 30 % வளர்ச்சியைக் குறிக்கும் வகையில், உள்நாட்டு சந்தையில் 30,258 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது, வணிக வாகனப் பிரிவில் விற்பனை அதிகரிப்பால் இது சாத்தியமானது.
எஞ்சின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் செமி கண்டக்டர்கள் மற்றும் சிப்கள், கார்களின் பல்வேறு செயல்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை கார்களின் சென்சார்கள் மற்றும் கட்டுப்பாட்டு பாகங்களின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். இவற்றில் நிலவும் தட்டுப்பாடானது ஒட்டுமொத்த கார் உற்பத்தியையே நிறுத்தி விடும் அளவுக்கு நிறுவனங்களை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. மாருதியின் உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 54.9 சதவீதம் சரிந்து 68,815 யூனிட்களாக இருந்தது. 2021 செப்டம்பரில் நிறுவனத்தின் விற்பனை அளவானது மின்னணு பாகங்கள் பற்றாக்குறை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாருதியைப் பொறுத்தவரை, ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ அடங்கிய மினி கார்களின் விற்பனை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 27,246 யூனிட்கள் விற்பனையானது, இப்போது செப்டம்பரில் 45.18 % குறைந்து 14,936 யூனிட்களாக இருக்கிறது. ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் போன்ற மாடல்கள் உள்ளிட்ட காம்பாக்ட் பிரிவின் விற்பனையானது கடந்த செப்டம்பரில் விற்கப்பட்ட 84,213 யூனிட்களுக்கு எதிராக 75.19 சதவீதம் சரிந்து 20,891 யூனிட்டுகளாக இருக்கிறது. நடுத்தர அளவிலான செடான் சியாஸின் விற்பனை, 2020 செப்டம்பரில் விற்ற 1,534 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில், 36.04 % குறைந்து 981 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் உள்நாட்டு விற்பனையானது, செப்டம்பர் 2020 ல் விற்பனையான 50,313 யூனிட்களுக்கு எதிராக 34.2 சதவீதம் குறைந்து 33,087 யூனிட்களாக இருக்கிறது, ஆனால், கடந்த செப்டம்பரில் ஏற்றுமதியானது, முந்தைய ஆண்டின் 9,600 யூனிட்டுகளுக்கு எதிராக 34.3 % அதிகரித்து 12,704 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஆட்டோமொபைல் துறையைக் கண்காணிக்கும் தொழில் துறை நிர்வாகிகளும், ஆய்வாளர்களும் “சிப்” (Chip) பற்றாக்குறை வரவிருக்கும் சில காலத்திற்குத் தொடரலாம் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
“வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும், மின்னணு பாகங்களுக்கான சிப்கள் மற்றும் செமி கண்டக்டர்களின் விநியோக நிலையில் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலை தொடர்ந்து நீடிக்கும்” என்று டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிகப் பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா கூறுகிறார். கார் தயாரிப்பில் நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் தீபாவளிக்கு முன்னதாகப் பெரும்பாலான டீலர்களிடம் ஸ்டாக் இல்லாமல் போகும்” என்கிறார்கள் துறை வல்லுநர்கள்.