இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ! – காரணம் என்ன ?
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த மின்சார தேவை மூலம் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளது. ஆகஸ்ட் மாத துவக்கத்தில் 13 நாட்களுக்குக்கான நிலக்கரி இருப்பு இருந்த நிலையில், இந்த மாதம் துவங்கும் போது வெறும் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே உள்ளது. குறிப்பாக 40 முதல் 50 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நிலையங்களில் தற்போதைய நிலக்கரி இருப்பு 3 நாட்களுக்கும் குறைவாக உள்ளது.
கடந்த சில வருடங்களில் இதுபோன்ற நிலை உருவானதில்லை என்பது மட்டுமின்றி,, சில மின்சார உற்பத்தி தளங்களில் நிலக்கரி இருப்பு இல்லை என்று கூறும் நிலை உருவாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் பெறப்படும் மின்சாரம் தான். எனவே இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த மின்சார தேவை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை பற்றி மத்திய மின் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில், “இந்த நிலக்கரி தட்டுப்பாடு அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
“மின்சார தேவை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 124 பில்லியன் யூனிட்கள் மின்சார தேவை இருந்தது. கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், மின்சார தேவை ஒரு மாதத்தில் 18 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் நாங்கள் 200 ஜிகாவாட்டைத் எட்டினோம், அப்போது தேவை 170-180 ஜிகாவாட்டாக ஆக மட்டுமே இருந்தது. தற்போது தேவை மட்டுமே 200 ஜிகாவாட்டாக உயரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று சிங் கூறினார்.
“தேவை எப்போதுமே குறையாது, அது அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். நாம் 28.2 மில்லியன் நுகர்வோரைச் இணைத்துள்ளோம். அவர்களில் பெரும்பாலோர் கீழ்-நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள், எனவே அவர்கள் மின்விசிறிகள், விளக்குகள், தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவற்றை வாங்குகிறார்கள். அவற்றிற்கு மின்சாரம் தேவை. இந்த மின்சார தேவை வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் அறிகுறியாகும்” என்று சிங் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையை சமாளிக்க மத்திய அமைச்சகங்கள் நாட்டின் மின் தேவைக்குத் தேவையான நிலக்கரியை உற்பத்தி செய்ய கோல் இந்தியா லிமிடெட், என்டிபிசி ஆகிய அரசு நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களிடம் நிலக்கரி சுரங்க உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளன. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி இருப்பையும் முக்கிய தேவையின் அடிப்படையில் நிலக்கரி சப்ளை செய்யப்படுவதையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.