காக்னிசன்ட் எச்சரிக்கை..
அலுவலக்ததுக்கு வந்து வேலை செய்யவில்லை என்றால் வேலையை இழக்க நேரிடும் என்று முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் தனது பணியாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் பாதியில் காக்னிசன்ட் ஒரு மின்னஞ்சலை தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளது. மீண்டும் அலுவலகத்துக்கு வரும்படி மனித வள அதிகாரி, திட்ட இயக்குநர், டீம் மேனேஜர் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியும் செல்லாதபட்சத்தில் கடுமையான நடவடிக்கையாக வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது. 2024 தொடக்கம் வரை எந்த விதமான திட்டமும் இல்லாத நிலையில் தற்போது பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் வர அந்நிறுவனம் அழுத்தம் கொடுத்து வருகிறது. காக்னிசண்ட் நிறுவனத்தில் மொத்தம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 700 பணியாளர்கள் பிப்ரவரி நிலவரப்படி உள்ள நிலையில் அதில் 73 விழுக்காடான இரண்டரை லட்சம் பணியாளர்கள் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி வரை வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்தால் போதும் என்று கூறிவந்த அந்நிறுவனம் தற்போது பிடியை இறுக்கியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றியபோது உற்பத்தி திறன் அதிகரித்த நிலையில் தற்போது பணியாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்திருக்கிறது. ஏற்கனவே டிசிஎஸ், எச்சிஎல்,விப்ரோ, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வாரத்தின் 5 நாட்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வர ஆணையிட்டுள்ளனர். அதே நேரம் இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்கள் மாதத்தில் 10 நாட்களாவது கட்டாயம் அலுவலகம் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.