3500ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நிறுவனம்
இந்திய அளவில் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் காக்னிசன்ட் எனப்படும் சிடிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் தற்போது வரை 3 லட்சத்து 51 ஆயிரத்து 500 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். என்னதான் நிறுவனம் அமெரிக்காவில் இயங்கினாலும் இதன் பெரும்பாலான பணியாளர்கள் இந்தியாவில்தான் உழைக்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தில் ரவிகுமார் என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் ஆட்குறைப்பு. இவரின் கணக்குப்படி இந்தாண்டு சிடிஎஸ் நிறுவனத்தின் வருமானம் குறையும் என்றும், அமெரிக்காவில் பொருளாதார சிக்கல் நிலவுவதாகவும் கூறுகிறார். மேலும் தேவையில்லாமல் இயங்கி வரும் அத்தனை செலவுகளையும் கட்டுப்படுத்தும் பணிகளும் இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரின் தரவுகளின்படி, பணியாளர்களுக்கு அதிகம் தரும் சம்பளம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தாண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500 பேரை வேலையில் இருந்து நீக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பணியாளர்களைவிட டெக்னாலஜியை அதிகம் நம்புவதாக கூறியுள்ள ரவிக்குமார், ஜெனரேட்டிவ் ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பணியாளர்களைவிட சிறப்பாக இயங்குவதாகவும், வேலையையும், செலவையும் நுட்பம் குறைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை அதிகம் நாட இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் அண்மையில்தான் அந்த நிறுவனம் பல ஊழியர்களுக்கு 18மாதங்களில் 3வது சம்பள உயர்வு அளித்தது.அதிரடி மாற்றங்களை சந்தித்து வரும் காக்னிசன்டில் ரவிக்குமாரின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள், தற்போது வரும் வருவாயை இரட்டிப்பாக்க ரவிக்குமாருக்கு அழுத்தம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.