தொடர்ந்து உயர்ந்த இந்திய சந்தைகள்:
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 847 புள்ளிகள் அதிகரித்து 64 ஆயிரத்து 762 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது சென்செக்ஸின் மொத்த வளர்ச்சியில் 1.33 விழுக்காடு வளர்ச்சியாகும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. 227 புள்ளிகள் அதிகரித்து 19,199 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு செய்தது. பக்ரீத் பண்டிகைக்காக 29ஆம் தேதி விடுமுறை விடுமுறை விடப்பட்ட நிலையில் , வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் நல்ல லாபத்தை முதலீட்டாளர்கள் பதிவு செய்தனர். Mahindra & Mahindra, IndusInd Bank, Infosys, Hero MotoCorp ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. தகவல் தொழில்நுட்பம்,பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 2 விழுக்காடு வரை லாபத்தை பதிவு செய்தன.ஆட்டோமொபைல், சந்தை மூலதன பொருட்கள் பங்குகள் 1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.
தங்கம் விலை சென்னையில் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7 ரூபாய் விலை குறைந்து 5 ஆயிரத்து 430 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 440 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் விலை குறைந்து 74 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையானது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் சேர்க்க வேண்டும், ஆனால் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். எனவே உங்களுக்கு கைராசியான நகைக்கடையை தேர்வு செய்து அங்கு குறைவான செய்கூலி,சேதாரம் உள்ளதா என்று பார்த்த பிறகு நகைகளை வாங்குவது உசிதம். சங்கம் செய்யாததையும் தங்கம் செய்யும், முடிந்த வரை தனிநபர்கள் தங்கத்தை குறிப்பிட்ட அளவுக்கு சேர்த்து வைப்பது ஆபத்து காலங்களில் உதவும்.