நுகர்வு சரிவே வீழ்ச்சிக்கு காரணம்..
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ரீட்டெயில், ஷாப்பர்ஸ்டாப் மற்றும் ஸ்பென்சர் உள்ளிட்ட நிறுவனங்களில் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் பெரிய லாபம் இல்லாமல் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
இந்த நிலை கடந்த 18 மாதங்களாக உள்ளதாகவும், தேர்தல் காலங்கள், வெப்ப அலை ஆகிய காரணங்களால் இந்த மந்த நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் தனது ரீட்டெயில் வணிகத்தின் 249 கடைகளை மூடியுள்ளது. அதே நேரம் 331 புதிய கடைகளை திறந்துள்ளது. வழக்கமாக 470 முதல் 800 கடைகள் வரை ஒவ்வொரு காலாண்டும் திறந்து வந்த ரிலையன்ஸுக்கே இந்த நிலைதான். ஸ்பென்சர் நிறுவனத்தின் விற்பனையை முழுமையாக வடக்கு மற்றும் தென் இந்தியாவில் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனமும் புதிய கடைகளை திறக்கும் யோசனைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும், 100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தான் கடைகளை திறக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. வீ மார்ட் என்ற நிறுவனம் கடந்த 6 மாதங்களில் 22 கடைகளை மூடியுள்ளது.
ஃபேஷன், வாழ்வியல் சார்ந்த பொருட்கள் சரிவை சந்தித்து வருவதாக ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் கடையை மூடம் ஸ்பென்சர் நிறுவனம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. கடந்த காலாண்டில் திருமண சீசன் குறைவாக இருந்ததாகவும், தேர்தல் நேரம் என்பதாலும், வெப்ப அலை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணிகளால் வளர்ச்சியை தடை செய்ததாகவும், ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பேண்டலூன்ஸ், வி.மார்ட்,டைட்டன் ஐபிளஸ் ஆகியோ நிறுவனங்களும் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தங்கள் கிளைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மூடிவிட்டது குறிப்பிடத்தக்கது.