கண்டெய்னர்கள் தட்டுப்பாடு-நடப்பது என்ன?
உலகளவில் கண்டெயினர்கள் தட்டுப்பாடு நிலுவுதால் பொருட்களை ஏற்றுமதி செய்வோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இருந்து பல்வேறு சிக்கல்களை இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் நிலையில், இந்த வரிசையில் புதிய வரவாக கண்டெய்னர் தட்டுப்பாடும் சேர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீன மின்சார வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் 37.6 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதேபாணியில் சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்காவிலும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படாலம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் மத்திய வருவாய்த்துறையிடம் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தையும் கோரிக்கையையும் முன்வைத்தனர். அதில் கண்டெய்னர் தட்டுப்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. செங்கடல் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதைகளில் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்வது குறித்தும், அதனால் ஆகும் செலவுகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை காண வேண்டும் என்றும் விரைந்து பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.