இந்திய சந்தைகளில் தொடரும் ஊசலாட்டம்
இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 28ம் தேதி ஒரு நிலையற்ற சூழல் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 40புள்ளிகள் சரிந்து 57,613 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் 34 புள்ளிகள் சரிந்தன. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை 16 ஆயிரத்து 951 புள்ளிகளாக நிறைவுற்றது. ஆரம்பத்தில் சிறப்பாக தெரிந்த இந்திய சந்தைகள் தனது வேகத்தை தக்கவைக்கத் தவறிவிட்டது.வங்கிகள் துறை பங்குகள் மீண்டு எழாமல் இருக்கும் சூழலில் அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டியில் ஆட்டோமொபைல்துறை பங்குகள் 1 விழுக்காடு சரிந்தது.தகவல்தொழில்நுட்பத்துறை 0.88%,உள்கட்டமைப்பு மற்றும் உலோகத்துறை பங்குகள் பூஜ்ஜியம் புள்ளி 7 விழுக்காடு சரிந்தது. 700க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தன. Adani Enterprises, Adani Ports, பந்தன் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லேசாக தலைதூக்கின. இண்டஸ் இன்ட் வங்கித்துறை பங்குகள் சுமார் 2.3% ஏற்றம் கண்டன. பங்குச்சந்தைகள் நிலைமை இப்படி இருக்க தங்கம்,வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்பட்டது. சென்னையில் மார்ச் 28ம் தேதி நிலவரமாக ஒரு கிராம் தங்கம் ரூபாய் 30 குறைந்து 5 ஆயிரத்து 510 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி கிலோ 75ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. (நீங்கள் கடையில் ஆபரணத்தங்கமாக வாங்க விரும்பினால் இந்த விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் அந்தந்த கடைகளுக்கே உரித்தான செய்கூலி சேதாரம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)