தங்கமும் பங்குகளும் பங்கமில்லாமல் வளர்ந்த நாள்
இந்திய பங்குச்சந்தைகளில் மே 4ம் தேதி கணிசமான வளர்ச்சி காணப்பட்டது. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியுள்ள சூழலில் அதன் பாதிப்பு இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது
இதுமட்டுமின்றி இந்திய நிறுவனங்களில் சிலவற்றின் கடந்த காலாண்டின் முடிவுகள் வெளியானதும் இந்திய சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் அதிகரித்து 61ஆயிரத்து 749 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் குறிப்பிட்ட எண் நிஃப்டி உயர்வு காணப்பட்டது. அதாவது 166 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி 18ஆயிரத்து255 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 5விழுக்காடு ஏற்றத்தை கண்டன.Bajaj Finance, HDFC, SBI Life Insurance ,HDFC Bank வங்கிகளும் ஏற்றம் கண்டன. இண்டஸ் இன்ட் வங்கி,யூபிஎல்,நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் பங்குகளில் சரிவை கண்டன. நிலைமை இப்படி இருக்க, சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 46ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. ஒருகிராம் தங்கம் 44 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 750 ரூபாயாக விற்பனையாகிறது. சவரனுக்கு 352 ரூபாய் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 82 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 82 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. தங்கம் வாங்கும் போது மேலே சொன்ன விலையுடன் 3 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி,சேதாரமும் தங்கத்தின் விலையை கூட்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.