டிரம்ப்புடன் ஃபைசர் முரட்டு டீல்..
அமெரிக்காவில், ஃபைசர் நிறுவனம் அதன் பல்வேறு மருந்துகளின் விலைகளைக் குறைக்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று, வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப்ஆர்எக்ஸ் (TrumpRx) எனப்படும் மருந்துகள் நேரடி விற்பனை வலைத்தளத்தையும் வெள்ளை மாளிகை தொடங்கி வைக்க உள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க முடியும். உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் லாபகரமான மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசர், இந்த தளத்தின் மூலம் அதன் சில மருந்துகளை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும்.
அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வலைத்தளத்தின் மூலம், அரசு நிர்ணயம் செய்த விலைகளில், பொது மக்கள் மருந்துகளை வாங்க முடியும். இதில் எத்தனை மருந்துகள் சேர்க்கப்படும் என்பது பற்றியும், இந்த முயற்சி பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு பயனளிக்குமா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே தனியார் காப்பீடு, மெடிகேர் அல்லது மெடிகெய்டு மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.
TrumpRx இந்தியாவின் ஜன் ஒளஷாதி கேந்திரா திட்டத்தை போல உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு உயர்தர பொது மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்களை , மலிவு விலையில் விற்க, சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் பிராண்டட் மருந்துகளுக்கு மாற்றாக ஜெனெரிக் வகை மருந்துகளை விற்கின்றன. ஏழைகளுக்கு பெரும் பயன் அளிக்கின்றன.
இந்நிலையில் ஃபைசர் நிறுவனம் அமெரிக்காவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், உற்பத்தி துறையிலும் 7,000 கோடி டாலர் முதலீட்டை அறிவிக்கும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு டிரம்ப் 100% வரி விதித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
