சீன தயாரிப்புகளை தடுக்க முடிவு..?
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்ததில் சீன கணினி உற்பத்திகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதே நிஜம். இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாற்றாக் இந்தியாவிலேயே 20 பில்லியன் டாலர் அளவுக்கு உபகரணங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு 20 பில்லியன் டாலர் தொகை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஊர் பெயர் தெரியாத 3ஆம் தர பொருட்களை இறக்குமதி செய்வதைவிடவும்,இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நவம்பர் 1 முதல் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த உற்பத்தி சார்பு ஊக்கத் தொகை திட்டம் 17,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து செல்போன்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில்,அதே பாணியில் லேப்டாப்கள் மற்றும் சர்வர்கள் உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்க பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனாவை நம்பியே இருப்பது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.தற்போது வரை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி என்பது 10விழுக்காடு அளவில் இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.இந்தியாவின் மொத்த டிஜிட்டல் உட்கட்டமைப்பையும் 70 விழுக்காடு வரை உயர்த்த மத்திய அரசு பணிகளை செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வன்பொருட்கள் உற்பத்தியானது 2027-ல் தற்போதுள்ளதைவிட 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகையானது 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.