நைஜீரியாவிலும் பணமதிப்பிழப்பு..,மக்கள் மத்தியில் கொந்தளிப்பு!!
இந்தியாவில் 2016-ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் மக்கள் வரிசையில் நின்று சிலர் உயிரிழந்துகூட போயினர். இதேபாணியில் கடுமையான ஏழை நாடான நைஜீரியாவிலும் இப்படி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்த நாட்டில் கதையே வேறாக உள்ளது. பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலமணிநேரம் கால்கடுக்க காத்திருக்கின்றனர். கருப்புப்பணத்தையும்,ஊழலையும் ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்று கூறியுள்ள அந்நாட்டு அரசு, புதிய நோட்டுகளை மக்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றது. புதிய நைரா வகை நோட்டுகள் குறைந்த அளவிலேயே கிடைப்பதால் வங்கிகளின் முன்பு பல கிலோமீட்டர் தூரம் மக்கள் காத்திருக்கின்றனர். ஏடிம் மையங்களில் பணம் இல்லாததால் ஆத்திரத்தில் உடைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. விலைவாசியை கட்டுப்படுத்த பழைய 1000,500,200 நைரா நோட்டுகளை மாற்றிவிட்டு புதிய பணத்தை புழக்கத்தில் விடுவதால் விலைவாசி குறையும் என்ற திட்டமே மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 31ம் தேதி வரை மட்டுமே காலக்கெடு இருந்த நிலையில் அதனை கடந்த 10ம் தேதி வரை நீட்டித்த நிலையில் அப்போதும் பழைய நோட்டுகள் மக்கள் மத்தியிலேயே கிடக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு நிலவுகிறது.