டிசிஎஸ் இப்படி செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை…
உலகளவில் பெரிய டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வரும் சூழலில் இந்திய நிறுவனங்கள் மட்டும் ஓரளவுக்கு தாக்குபிடித்து நிற்கின்றன. இந்த நிலையில் பணிப்பாதுகாப்புக்கு சிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக ஆட்களை சேர்க்கும் எண்ணிக்கை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. ஆம் கடந்த 2022ம் நிதிஆண்டில் புதிதாக 1லட்சத்து 30ஆயிரம் பேரை வேலைக்கு சேர்த்த அந்த நிறுவனம், 2023 நிதியாண்டில் வெறும் 22 ஆயிரத்து 600 பேரை எடுத்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 31ம் தேதியுடன் 6 லட்சத்து 14 ஆயிரத்து 795 ஆக உள்ளது. கடந்த 2015ம் நிதியாண்டில் தான் மிகக்குறைவாக அந்த நிறுவனம் வெறும் 19 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்தது. அதற்கு பிறகு 2023 நிதியாண்டில்தான் குறைந்தபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.நெட்பேசிஸ் அடிப்படையில் கடந்த 2021ம் நிதியாண்டில் 40,185 பணியாளர்களை சேர்த்த அந்நிறுனம், அதற்கு முந்தைய ஆண்டு 24,179 பேரையும், அதற்கு முன் ஆண்டான 2019-ல் 29,287 பேரையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டது. 2023ம் நிதியாண்டில் மட்டும் 44 ஆயிரம் பேரை புதிய பட்டதாரிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ள அந்நிறுவனம் அவர்களை இன்னும் பணியில் அமர்த்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது. புதிதாக ஆட்களை சேர்ப்பதில் பெரிய நிறுவனங்கள் தயக்கம் காட்டும் அதே பாணியில்தான் டாடா கன்சல்டன்சி நிறுவனமும் பயணிக்கிறது என்று அந்த நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவர் மிலிந்த் லக்கார்ட் தெரிவித்துள்ளார். அவ்வளவு எளிதில் ஒருவரை டாடா கன்சல்டன்சி நிறுவனம் வேலையில் இருந்து நீக்காது என்பதே இந்த நிறுவனத்தின் மீது பலருக்கு ஆர்வம் வர முக்கிய காரணமாக கருதப்படுகிறது.