டாடாவிடம் 30% பங்குகளை விற்கும் டிஸ்னி..
வால்ட் டிஸ்னி நிறுவனம் தன் வசம் இருந்த 30 விழுக்காடு பங்குகளை டாடா குழுமத்தில் உள்ள டாடா பிளே நிறுவனத்திடிம் விற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 விழுக்காடு பங்குகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்போவதாக தகவல் கசிந்துள்ளது. 29.8 விழுக்காடு பங்குகளை கைப்பற்றியபிறகு அதனை டாடா பிளே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். கடந்த பிப்ரவரியில் டிஸ்னி நிறுவனம் தனது பெரிய பங்கை ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானியிடம் விற்றதாக அறிவிக்கப்பட்டது. வயாகாம் 18 மீடியா நிறுவனத்திடம் டிஸ்னி தனது பங்குகளை விற்றுள்ளது. 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த டீல் முடிந்தது. ஏற்கனவே இந்தியாவில் 75 கோடி பார்வையாளர்களை அம்பானியின் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ஆம் ஆண்டு 21stசென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்துடன் டாடா பிளே நிறுவனம் கைகோர்த்து டிடிஎச் சேவைகளை வழங்கி வருகிறது. டிடிஎச் உடன் ஓடிடி செயலியிலும் டாடா பிளே இயங்கி வருகிறது. கடந்த 2022-ல் தைரியமாக டாடா பிளே நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்தது. ஆனால் இதுவரை அது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை. டெமாசெக் ஹோல்டிங் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்கியதால் டாடா பிளேவின் தற்போதைய பங்கு அளவு 70 விழுக்காடுக்கும் அதிகமாக உள்ளது.
டாடா பிளேவின் ஆரம்ப பங்கு வெளியீடு நடந்தால் டெமாசெக் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் வெளியேறிவிடும், டிடிஎச் சந்தையில் புதிய சவால்கள் மற்றும் சந்தை சூழல்கள் காரணமாக இந்த வெளியேற்றம் நடக்கும் என்றும் புளூம்பர்க் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.