விமான டிக்கெட் விலையை உயர்த்தகூடாது!!!!
ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்டதால் பல்வேறு சிக்கல்கள் ரயில் சேவையில் ஏற்பட்டது. இதனால் அவசர தேவைக்காக பலரும் விமானம் மூலம் வர தயாராகி வருகின்றனர். ரயில்களில் சென்றவர்களின் உறவினர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் விமானங்களை திடீரென புக் செய்வதால் அவர்களிடம் பெரிய தொகை வசூலிக்க வாய்ப்பிருப்பதால் அங்கு என்ன நிலை என்பதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ,அல்லது பயணத்தை பயணிகள் மாற்றினாலோ எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கவாச் என்ற தற்காப்பு அமைப்பு இல்லாததன் காரணமாக இந்த ரயில் விபத்துகள் நேரிட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் விபத்து நடந்ததும் ஒடிசாவில் விமான போக்குவரத்து திடீரென அதிகரித்த நிலையில் உரிய நேரத்தில் தலையிட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டுள்ளதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். துயரமான நேரத்திலும் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த விமான நிறுவனங்களுக்கு எதிரான கண்டனங்களும் பல தரப்பிலும் இருந்து சமூக வலைதளங்களில் குவிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் சரியான நேரத்தில் கண்காணித்ததுடன், கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.